

ஃபர்ஹாத் சம்ஜி இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ள படம் 2021-ம் ஆண்டு ஈத் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் வெற்றிகரமான நடிகர்களில் முக்கியமானவர் சல்மான் கான். இவரது படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபிஸில் குறைந்தது 100 கோடியைத் தாண்டுகின்றன. சில படங்களுக்கான விமர்சனங்கள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் வசூலில் மட்டும் பெரிதாக சோடை போகாது. கடந்த வருடக் கடைசியில் வெளியான தபாங் 3 இதற்கு ஒரு நல்ல உதாரணம். கிட்டத்தட்ட அனைத்து விமர்சகர்களுமே இந்தப் படத்தை வசைபாடினாலும் 200 கோடியைத் தாண்டி வசூலைக் குவித்தது.
தற்போது 'தபங் 3' இயக்கிய பிரபுதேவாவின் இயக்கத்தில் 'ராதே' என்ற படத்தில் நடித்து வருகிறார் சல்மான் கான். இந்தப் படம் இந்த வருடம் ரம்ஜானுக்கு வெளியாகிறது. இதில் கோலிவுட் நடிகர் பரத்தும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திஷா படானி நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் ரந்தீப் ஹூடா வில்லனாக நடிக்கிறார்.
தற்போது அடுத்த வருடம் (2021) ரம்ஜானுக்கு வெளியாகவுள்ள தனது படத்தைப் பற்றிய அறிவிப்பை சல்மான் கான் வெளியிட்டுள்ளார். "எனது அடுத்த படத்தை அறிவிக்கிறேன். 'கபீ ஈத், கபி தீவாளி'... கதை, தயாரிப்பு சாஜித் நதியாத்வாலா. இயக்கம் ஃபர்ஹாத் சம்ஜி.. ஈத் 2021" என்று சமூக வலைதள பக்கத்தில் சல்மான் கான் பகிர்ந்துள்ளார்.
இந்தப் படம் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.