

தான் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பில், நாயகனே முதலில் சாப்பிடுவார், அதன் பிறகே நீங்கள் சாப்பிட வேண்டும் என்று தன்னிடம் சொல்லப்பட்டதாக நடிகை நேஹா தூபியா ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
2018ல் துவங்கிய மீடூ இயக்கத்தின் தாக்கம் இன்று வரை நீடித்து வருகிறது. முக்கியமாக சினிமாத்துறையில் மீடூ இயக்கத்தை கையிலெடுத்த பல பெண் நட்சத்திரங்கள், தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பார்த்த, துன்புறுத்திய நபர்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளனர். அதில் சிலர் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் பாலிவுட்டிலிருந்து வெளிப்படையாகப் பேசியவர்களின் எண்ணிக்கையே அதிகம். தற்போது பாலிவுட் நடிகை நேஹா தூபியா வேறொரு வகையான குற்றச்சாட்டை தெலுங்கு சினிமா நடிகர் ஒருவர் மீது வைத்துள்ளார்.
சமீபத்தில் ஒரு இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "நீண்ட நாட்களுக்கு முன்பு நான் ஒரு தென்னிந்தியப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது, படத்தின் நாயகனே முதலில் சாப்பிட வேண்டும் என்று அவர்கள் நிர்பந்திப்பார்கள். நான் பசிக்கிறது என்று சொன்னால் கூட, நாயகன் படப்பிடிப்பில் இருக்கிறார், அது முடிந்து அவர் தான் முதலில் தட்டை கையிலெடுப்பார் என்பார்கள். இப்படியான வேடிக்கையான விஷயங்கள் நடக்கும்.
ஆனால் அது போன்ற விஷயங்கள் இப்போது நடப்பதில்லை. ஒரு முறை என் முன்னால் நடந்தது. அப்போதும் நான் சிரித்துதான் கடந்து போனேன். அது என்னைப் பெரிதாக உறுத்தவில்லை. சரி நான் காத்திருக்கிறேன் என்று உட்கார்ந்து கொண்டேன்" என்று குறிப்பிட்டார்.
'நின்னே இஷ்டபட்டானு', 'வில்லன்', 'பரம வீர் சக்ரா' உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நேஹா தூபியா நடித்துள்ளார். இதில் அவர் எந்தப் படத்தின் நாயகனைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் என்பது பற்றி பேசவில்லை. முன்னதாக, மீடூ இயக்கம் தீவிரமடைந்த போது நடிகை ராதிகா ஆப்தே கூட, தான் ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தன்னிடம் ஒரு நடிகர் அத்துமீறி நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.