

கங்கனாவின் பேச்சை திரித்துக் கூற வேண்டாம் என அவரது சகோதரி ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 15-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அரசு பஸ்கள், போலீஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஜாமியா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் ட்விட்டர் வாயிலாக மாணவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகை கங்கணா ரணாவத் “மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது அதனை வன்முறையாக மாற்றாமல் இருப்பது முதலில் முக்கியமானது. நமது மக்கள் தொகையில் 3% மட்டுமே வரி செலுத்துபவர்கள் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் அவர்களைத்தான் நம்பி இருக்கிறார்கள். அவ்வாறு இருக்கையில் பேருந்துகளை எரிக்கவும், கலவரத்தை ஏற்படுத்தவும் யார் உங்களுக்கு அதிகாரம் அளித்தார்கள்? " என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
கங்கனாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கங்கனாவுக்கு எதிராக நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
கங்கனாவின் இந்த பேச்சை குறிப்பிட்டு டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிஸோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் ”வன்முறையும் பொதுச்சொத்துக்கு பங்கம் விளைவிப்பதும் மனித குலத்துக்கும் சட்டத்துக்கும் எதிரானது. ஆனால் இந்த நாடு வெறும் 3 சதவீத மக்களை மட்டும் சார்ந்திருக்கவில்லை. பணக்காரர் முதல் தினக்கூலி வேலை செய்யும் நபர் வரை நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வரி செலுத்தி வருகின்றனர். கூலி வேலை செய்பவர் சினிமாவுக்கு சென்றால் கூட கேளிக்கை வரி செலுத்தித்தான் படம் பார்க்கிறார். யாரை நம்பி யார் இருக்கிறார்கள் என்று இப்போது சிந்தியுங்கள்” என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கங்கனாவின் சகோதரி ரங்கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “சார்.. கங்கனா தெளிவாக வருமான வரியைப் பற்றி குறிப்பிடுகிறார். தயவு செய்து அவரது பேச்சை திரிக்க வேண்டாம். நாம் சாலைகளை பயன்படுத்தினால் அதற்கான வரியை செலுத்தவேண்டும், உப்பு வாங்கினால் அதற்கான வரியை செலுத்த வேண்டும். அவையெல்லாம் வருமான வரியல்ல.”
இவ்வாறு ரங்கோலி குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவி’ படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.