

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் 70-வது இடம் அளித்ததிருப்பது தொடர்பாகக் கடுமையாகச் சாடியுள்ளார் கங்கணாவின் சகோதரி ரங்கோலி சாந்தில்
பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2019-ம் ஆண்டுக்காகப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியப் பிரபலங்களின் ஆண்டு வருமானம், புகழ் மற்றும் சமூக வலைதளத்தில் உள்ள வரவேற்பு ஆகியவற்றை முன்வைத்து 100 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் 252.72 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி முதலிடத்தில் உள்ளார் விராட் கோலி. நடிகர்களில் இந்தி நடிகர் அக்ஷய் குமார் 293.25 கோடி ரூபாய் வருமான ஈட்டி இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் கங்கணா ரணாவத் 17.5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி 70-வது இடத்தில் உள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டியலைக் கடுமையாகச் சாடியுள்ளார் கங்கணாவின் சகோதரி ரங்கோலி சாந்தில். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில், "ஃபோர்ப்ஸ் இந்தியா ஒரு ஏமாற்று பத்திரிகை. அவர்கள் பத்திரிகையில் பதிப்பித்திருக்கும் நட்சத்திரங்களின் வருமானப் பட்டியலில் ஒன்றையாவது அவர்களால் நிரூபிக்க முடியுமா என்று நான் வெளிப்படையாகச் சவால் விடுகிறேன். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொத்த வருமானத்தை விட அதிகமாக கங்கணா வரி கட்டுகிறார். யார் எவ்வளவு வரி கட்டினார்கள் என்று அவர்களால் சொல்ல முடியுமா?
ஒருவரின் வருமானத்தை வெறுமனே கற்பனை செய்யக்கூடாது. இந்த வருடம் எவ்வளவு வருமானம் வந்தது என்று கங்கணாவுக்குக் கூட தெரியாது. அவரது கணக்கு வழக்குகளைப் பார்ப்பவர்களுக்கும் எனக்கு மட்டுமே தெரியும். நாங்கள் அவருக்கு எல்லா விவரங்களையும் தெரிவிப்போம். அந்த விவரங்கள் எல்லாமே ரகசியமானது.
இந்த நிதி ஆண்டு இன்னும் முடியவே இல்லை, முன்கூட்டி செலுத்தப்படும் வரி மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்குள் இந்த பத்திரிகையாளர்கள் மொத்த திரைத்துறையின் கணக்கு வழக்குகளும் தங்களுக்குக் கிடைத்துவிட்டதைப் போல நடிப்பார்கள். அன்பார்ந்த ஃபோர்ப்ஸ், உங்களுக்கு இந்தத் தகவல் சொன்ன அந்த நம்பகமானவர் யார் என்பதை நீங்கள் சொன்னால் நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். போதை மருந்து உட்கொண்டு விட்டு என்ன வேண்டுமானாலும் எழுதக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.