

ஒவ்வொரு குரலும் முக்கியம். இந்தியாவை மாற்ற உதவும் என்று பிரியங்கா சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளிலிருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பதிவில், "ஒவ்வொரு குழந்தையின் கல்வியும் எங்கள் கனவு. கல்வி தான் அவர்களை சுதந்திரமாகச் சிந்திக்க வைத்துள்ளது. அவர்களுக்கென ஒரு குரல் இருக்க வேண்டும் என்று தான் அவர்களை வளர்த்திருக்கிறோம். ஒரு வளரும் ஜனநாயகத்தில் ஒருவர் அமைதியாகக் குரலை எழுப்புவதும் அது வன்முறையால் எதிர்கொள்ளப்படுவதும் தவறு. ஒவ்வொரு குரலும் முக்கியம். ஒவ்வொரு குரலும் இந்தியாவை மாற்ற உதவும்" என்று தெரிவித்துள்ளார்.