

நானி கதாபாத்திரத்தில் ஷாகித் கபூர் நடிக்க 'ஜெர்ஸி' இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
'அர்ஜூன் ரெட்டி'யின் இந்தி ரீமேக்கான 'கபீர் சிங்' திரைப்படம் பாலிவுட்டில் பிரம்மாண்ட வெற்றி பெற்றதால், மீண்டும் தெலுங்குப் பட ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் ஷாகித் கபூர். தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜெர்ஸி' படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி, அதற்கான தனது முன்னேற்பாடுகளைத் தொடங்கினார்.
தற்போது அனைத்து முதற்கட்டப் பணிகளும் முடிவடைந்து, படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தியிலும் 'ஜெர்ஸி' என்ற பெயரில் இந்தப் படம் தயாராகிறது. தெலுங்கில் இந்தப் படத்தை இயக்கிய கவுதமே இந்தியிலும் இயக்கவுள்ளார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஜெர்ஸி' இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூரின் ஆலோசகர் கதாபாத்திரத்தில் அவரது தந்தையும் மூத்த பாலிவுட் நடிகருமான பங்கஜ் கபூர் நடிக்க உள்ளார். இதர நடிகர்கள் யாரையும் படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
'ஜெர்ஸி' தமிழ் ரீமேக் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதனை 'மான்ஸ்டர்' இயக்குநர் நெல்சன் இயக்க விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.