

ரன்வீர் சிங் படத்தின் மூலம் இந்தியில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் ஷாலினி பாண்டே.
1983-ம் ஆண்டு இந்திய ஜெயித்த உலகக் கோப்பை போட்டியைப் பின்னணியாகக் கொண்ட '83' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரன்வீர் சிங். இந்தப் படத்தைத் தொடர்ந்து யாஷ்ராஜ் நிறுவனம் தயாரிக்கும் 'ஜயேஷ்பாய் ஜோர்தார்' படத்தில் நடிக்கவுள்ளார்.
இதன் படப்பிடிப்பு பணிகள் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஷாலினி பாண்டே. மேலும், இதன் மூலம் இந்தியில் அறிமுகமாகவுள்ளார்.
தமிழில் '100% காதல்' படத்துக்குப் பிறகு 'அக்னிச் சிறகுகள்' படத்தில் நடித்து வந்தார். ஆனால், படப்பிடிப்புக்குச் சரிவர ஒத்துழைக்காத காரணத்தால் அவரை நீக்கிவிட்டது படக்குழு. தற்போது இவருடைய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசன் நடித்து வருகிறார்.
இந்திப் படத்தில் ஒப்பந்தமானதால்தான், தென்னிந்திய மொழிகளில் சமீபமாக ஷாலினி பாண்டே ஒப்புக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. தெலுங்கிலும் அனுஷ்கா நடித்த 'நிசப்தம்' மற்றும் 'இடரி லோஹம் ஒக்கடே' ஆகிய படங்களுக்குப் பிறகு எந்தவொரு புதிய படத்தையும் ஷாலினி பாண்டே ஒப்புக் கொள்ளவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.
'ஜயேஷ்பாய் ஜோர்தார்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை யாஷ்ராஜ் நிறுவனம் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கவில்லை.