’சப்பாக்’ ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் அழுத தீபிகா படுகோன்

’சப்பாக்’ ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் அழுத தீபிகா படுகோன்
Updated on
1 min read

நடிகை தீபிகா படுகோன், தான் நடித்த 'சப்பாக்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசும் போது அழுத வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகி, மீண்டு வந்து, வாழ்வில் வெற்றி கண்ட லக்‌ஷ்மி என்பவரின் உண்மைக் கதை, 'சப்பாக்' என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இதில் தீபிகா படுகோன் லக்‌ஷ்மி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேக்னா குல்சார் இந்தப் படத்தை இயக்குகிறார். தீபிகா இந்தப் படத்தை இணைந்து தயாரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி செவ்வாய் அன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்காக முதலில் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. பிறகு தீபிகா, மேக்னா உள்ளிட்ட படக்குழுவினர் ஊடகத்தினர் முன் வந்து நின்று பேச ஆரம்பித்தனர்.

தீபிகா பேசுகையில், "ட்ரெய்லர் மட்டுமே காட்டப்படும், நாங்கள் மேடைக்கு வருவோம் என்றே நினைத்தேன். ஆனால் நான் மேடைக்கு வந்ததும் பேச வேண்டும் என்பது பற்றி நினைக்கவே இல்லை. இந்த ட்ரெய்லரைப் பார்க்கும்போதெல்லாம். நாம் இதைப் பற்றி பிறகு பேசலாமா, என்னை மன்னித்து விடுங்கள்" என மேற்கொண்டு பேச முடியாமல் தீபிகா அழ ஆரம்பித்தார்.

அவருக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த இயக்குநர் மேக்னா, "தீபிகா இதுவரை முழு ட்ரெய்லரை பார்க்கவில்லை என்றும், இப்போதுதான் பார்த்திருப்பதால் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் என்று, யாரும் அவர் அழுவதைப் படம்பிடிக்காதீர்கள்" என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in