

பாலிவுட்டின் வெற்றிகரமான நாயகர்களில் அக்ஷய் குமார் முக்கியமானவர். இவரது சமீபத்திய படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். குறிப்பாக மிஷன் மங்கள், ஹவுஸ்ஃபுல் 4 என இரண்டு படங்களும் ரூ.200 கோடி வசூலைத் தாண்டியது.
ஆனால் எல்லாரையும் நக்கல் நையாண்டி செய்யும் நெட்டிசன்கள் அக்ஷய்குமாரை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? பயோபிக் படங்களில் நடிப்பது, பாஜக ஆதரவு, பிரதமர் மோடியைப் பேட்டி எடுத்தது என தொடர்ந்து அக்ஷய்குமாரின் பெயர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும்.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் அக்ஷய் குமார் ஓட்டுப்போடவில்லை. இதற்கு அவரிடம் இருக்கும் கனடா நாட்டுக்கான பாஸ்போர்ட்டே காரணம் என அதற்கும் கலாய்க்கப்பட்டார் அக்ஷய்குமார். இதுகுறித்து தற்போது ஒரு பொது நிகழ்ச்சியின் கலந்துரையாடலில் அக்ஷய்குமார் பேசியுள்ளார்.
"எனது திரை வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் எனது 14 படங்கள் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்தன. அவ்வளவுதான் நமக்கு இனி இங்கு எதிர்காலம் இல்லை என்று நினைத்தேன். எனது நெருங்கிய நண்பர் ஒருவர் கனடாவில் இருந்தார். இங்கு வா, நாம் இருவரும் சேர்ந்து வேலை செய்வோம் என்றார். அவரும் இந்தியரே.
எனவே கனடா பாஸ்போர்டைப் பெறுவதற்கான வேலைகளை ஆரம்பித்தேன். இனி எனக்கு இங்கு வாய்ப்பே கிடைக்காது என்று நினைத்தேன். ஆனால் எனது 15-வது படம் வெற்றி பெற்றது. அப்போதிலிருந்து தொடர்ந்து திரைப்படங்களில் பணியாற்றி வருகிறேன். எனது பாஸ்போர்டை மாற்ற வேண்டும் என்றே எண்ணம் வரவில்லை.
ஒரு துண்டு காகிதத்தை வைத்துத்தான் எனது தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்று வரும்போது அது வலிக்கிறது. ஆனால் நான் இப்போது இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளேன். விரைவில் கிடைத்துவிடும்.
நான் ஒரு இந்தியன், எனது மனைவி, மகன் இந்தியர்கள். அவர்களுக்கு என்னால் கனடா குடியிருமை வாங்கியிருக்க முடியும். ஆனால் நான் அதைச் செய்யவில்லை. நான் இந்தியாவில் வாழ்கிறேன். இங்கு வரி கட்டுகிறேன்" என்று அக்ஷய்குமார் பேசியுள்ளார்.
அக்ஷய்குமாரின் இந்த கருத்துக்கும் வழக்கம் போல நெட்டிசன்கள் ஆதரவும் எதிர்ப்புமாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.