

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படமாகிறது. டாப்ஸி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மித்தாலி ராஜ். 1999-ம் ஆண்டிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். தொடர்ச்சியாக மகளிர் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர், ஒரு நாள் போட்டியில் 6000 ரன்களைக் கடந்த ஒரே வீராங்கனை, தொடர்ச்சியாக 7 முறை 50 ரன்களை கடந்த ஓரே வீராங்கனை என பல சாதனைகளை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நிகழ்த்தியுள்ளார் மித்தாலி ராஜ். மேலும், கிரிக்கெட் போட்டியில் 20 ஆண்டுகளைக் கடந்த ஒரே வீராங்கனை என்ற பெயரும் எடுத்துள்ளார்.
தற்போது இவருடைய வாழ்க்கை வரலாறு, இந்தியில் படமாக உருவாகிறது. இதில் மித்தாலி ராஜ் ஆக நடிக்க டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்று (டிசம்பர் 3) மித்தாலி ராஜின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு அவருடைய பயோபிக் அறிவிக்கப்பட்டுள்ளது.
'சபாஷ் மித்து' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ராகுல் தொலாகியா இயக்கவுள்ளார். இவர் 'லம்கே', 'பர்சானியா' மற்றும் 'ராயீஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். வயகாம் 18 நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கவுள்ளது.
மித்தாலி ராஜ் பயோப்பிக்கில் நடிக்கவுள்ளது குறித்து டாப்ஸி தனது ட்விட்டர் பதிவில், "பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன், இந்த பிறந்தநாளில் உங்களுக்கு என்ன பரிசளிப்பது என எனக்கு தெரியவில்லை ஆனால் சபாஷ் மிது திரைப்படத்தில் உங்களை பார்த்து நீங்கள் பெருமைப்படுவீர்கள் என்ற உறுதியை நான் தருகிறேன். பின்குறிப்பு: ‘கவர் டிரைவ்’கற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.