

நமது ஒழுக்க நெறிகள் தொடர்ந்து கந்தலாகியே இருக்கின்றன என்று பிரியங்கா ரெட்டி மரணம் தொடர்பாக அக்ஷய் குமார் வேதனையுடன் ட்வீட்டியுள்ளார்.
ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி காணாமல் போனதாகப் பெற்றோர் போலீஸில் புகார் அளித்த நிலையில் அவரது உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் செய்தி இணைய வாசிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. #RIPPriyankaReddy, #JusticeForPriyankaReddy ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது. மேலும், பிரியங்கா ரெட்டி மரணத்துக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களுடைய இரங்கலையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரியங்கா ரெட்டி மரணம் தொடர்பாக இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பதிவில், "ஹைதராபாத்தின் பிரியங்கா ரெட்டியோ, தமிழ்நாட்டின் ரோஜாவோ, அல்லது ராஞ்சியில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான கல்லூரி மாணவியோ, ஒரு சமுதாயமாக நாம் (நம் நெறிகளை) இழந்து வருகிறோம்.
குலை நடுங்கச்செய்யும் நிர்பயா வழக்கு முடிந்து 7 வருடங்கள் ஆகிவிட்டது. நமது ஒழுக்க நெறிகள் தொடர்ந்து கந்தலாகியே இருக்கின்றன. நமக்குக் கடுமையான சட்டங்கள் தேவை. இது நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் அக்ஷய் குமார்.