

இந்தியில் வெளியாகவுள்ள 'பெல் பாட்டம்', கன்னட மொழியில் வெளியான 'பெல் பாட்டம்' என்ற படத்தின் ரீமேக் இல்லை என்று அக்ஷய் குமார் பதில் அளித்துள்ளார்.
பாலிவுட்டில் தொடர்ந்து அதிக சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து வருபவர் நடிகர் அக்ஷய் குமார். இந்த வருடத்தில் மட்டுமே 'கேசரி', 'மிஷன் மங்கள்', 'ஹவுஸ்ஃபுல் 4' என அவரின் மூன்று படங்கள் பெரிய வெற்றி பெற்றுள்ளன.
அடுத்த ஆண்டில் 'சூர்யவன்ஷி', 'லக்ஷ்மி பாம்' உள்ளிட்ட படங்கள் வெளியாகும் என அறிவித்துள்ளார். தற்போது தனது 2021ஆம் ஆண்டு ஜனவரி மாத வெளியீட்டை அறிவித்துள்ளார்.
'பெல் பாட்டம்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம் 80’களில் நடக்கும் உளவாளிகள் பற்றிய த்ரில்லர் கதை என்று தெரிகிறது. 22 ஆம் தேதி ஜனவரி 2021-ல் படம் வெளியாகும் என அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ரஞ்சித் திவாரி இயக்கும் இந்தப் படத்தை வஷு பாக்னானி, ஜக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, நிகில் அத்வானி என பலரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
சமீபத்தில் வெளியான 'பெல் பாட்டம்' என்ற கன்னட மொழிப் படத்தின் ரீமேக்கா இது என்று கேட்டதற்கு, '''பெல் பாட்டம்' எந்தப் படத்தின் ரீமேக்கும் கிடையாது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டுள்ளது'' என அக்ஷய் குமார் பதிலளித்துள்ளார்.