

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக் கதையில் ஆமிர் கான் பல்வேறு மாற்றங்களைச் சொல்லியிருப்பதால் படக்குழுவினர் கலக்கத்தில் உள்ளனர்.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
2017-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி வெளியான இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால், அனைத்து ரீமேக் உரிமையுமே சஷிகாந்திடம்தான் இருக்கிறது. இந்தியில் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து ரீமேக்கை உருவாக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.
ஷாரூக் கான் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு, படக்குழு மறுப்பு தெரிவித்தது. இறுதியில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஆமிர் கான், மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. புஷ்கர் - காயத்ரியே இப்படத்தை இந்தியில் இயக்கவுள்ளனர்.
இதனிடையே இந்தி ரீமேக்கின் முழுக்கதையையும் ஆமிர் கானிடம் கொடுத்துள்ளது படக்குழு. அவரோ அதில் திருப்தியில்லாமல், பல்வேறு மாற்றங்களைச் சொல்லியிருப்பதால் படக்குழு மிகவும் கலக்கத்தில் உள்ளது. தற்போது அந்த மாற்றங்களை இந்தி திரையுலகின் எழுத்தாளர்களுடன் இணைந்து புஷ்கர் - காயத்ரி மாற்றி வருகிறார்கள்.
இதன் இறுதி வடிவத்துக்கு அனைத்து நடிகர்களும் ஓ.கே. சொன்னவுடன்தான் படப்பிடிப்புக்குச் செல்ல முடியும் என்பதால், பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களை இயக்க வாய்ப்பு கிடைத்தும், புஷ்கர் - காயத்ரி இந்தி ரீமேக்குக்காகத் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.