

நைனிடால்,
புற்றுநோயிலிருந்து மீண்டு உயிர் பிழைத்தவர் என்று யாராவது என் மீது லேபிள் குத்தினால் அதைப் பற்றி துளியும் கவலைப்பட மாட்டேன் என்று நடிகை மனிஷா கொய்ராலா வெளிப்படையாக பேசியுள்ளார்.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் பிறந்த மனிஷா, நேபாளத்தின் 22வது பிரதமர் பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலாவின் பேத்தி ஆவார், மேலும் 1991 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற 'சவுதகர்' மூலம் இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். அவர் பாலிவுட்டில் 'தில் சே' 'பம்பாய்' போன்ற பெரிய வெற்றிகளைப் பெற்றார். இவர் பாலிவுட்டில் மட்டுமின்றி நேபாளி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர்.
சில ஆண்டுகளாக திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்தார். அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது 2012ல், கண்டறியப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த நம்பிக்கையோடு சிகிச்சை பெற்று மீண்டு எழுந்தவர். தற்போது மிகவும் உற்சாகமாகியுள்ள மனிஷா கொய்ராலா புற்றுநோய் குறித்த பொது விழிப்புணர்வை பரப்புவதற்கு தனது கணிசமான நேரத்தை செலவிட்டு வருகிறார்.
மனீஷா கொய்ராலா, நைனிடாலில் இன்று நடந்த 'இரண்டு நாள் இமயமலை சுற்றுச்சூழல்: குமாவோன் இலக்கியம் மற்றும் கலை விழா'வில் கலந்துகொண்டார். எல்லோரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் புற்றுநோயிலிருந்து வெளியேறிய தனது வேதனையான பயணத்தை விவரித்தார்.
இமயமலை சுற்றுச்சூழல் கலை இலக்கிய விழாவில் மனிஷா பேசியதாவது:
"நான் கடந்து வந்ததை நானே புரிந்து கொள்ள வேண்டியிருந்தது, மக்களுக்கும் புரியவைக்க வேண்டியிருந்தது. அதனால்தான் என் வாழ்க்கையை 'Healed: How Cancer Gave Me a New Life' என்ற பெயரில் புத்தகமாக எழுதினேன். ஒருவேளை என்னை யாராவது இவர் புற்றுநோயிலிருந்து மீண்டு உயிர் வாழ்பவர் என்று முத்திரை குத்தினால் அதைப்பற்றி துளியும் கவலைப் படமாட்டேன்.
புற்றுநோய்க்கு பதிலாக எனது நடிப்பு மற்றும் செயல்திறன் பற்றி மக்கள் மீண்டும் பேசத் தொடங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
புற்றுநோய் கண்டறிதல், சிகிச்சை பெறுதல் என்பது மிகவும் தனிமையான ஒரு பயணம் ஆகும். அப்போது நான் மரணத்தை எதிர்கொண்டிருந்தேன், நோயறிதலுக்கான கடுமையான இறுதி விளைவாக எனக்கு மரணம்தான் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்று.
ஒரு ரோஜா தனது நிறத்தை முற்றிலுமாக இழக்கப்போகிறது என்பதை உணர வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. எனது ஆரம்ப கால வாழ்க்கை முழுவதும் ஆல்கஹாலால் நிரப்பப்பட்டதே, வாழ்க்கை மோசமாக மாறியதற்கு காரணம் என்பதை புத்தகத்திலேயே ஒப்புக் கொண்டுள்ளேன்.
இது எல்லாம் வாழ்க்கையா? என்ற கேள்வியை நான் எதிர்கொண்டேன். எனது இந்த 40 ஆண்டுகளில் நான் என்ன செய்தேன்? ஒன்றுமேயில்லை. இப்போதுதான் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கத் தொடங்கியுள்ளேன்.
புற்றுநோய் அற்ற ஒரு இளம் ஆண் மகனைப்போல கற்பனை செய்து கொள்ளத் தொடங்கியுள்ளேன். வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பை மிகவும் விரும்புகிறேன், இப்போது நான் கிட்டத்தட்ட ஒரு புதிய நபர்.
இவ்வாறு மனிஷா கொய்ராலா பேசினார்.
நோயிலிருந்து குணமடைந்த பிறகு, மனிஷா ‘டியர் மாயா’, ‘சஞ்சு’, ‘பிரஸ்தானம்’ ஆகிய படங்களிலும் மற்றும் நெட்ஃபிக்ஸ் தொடரான ‘லஸ்ட் ஸ்டோரிஸிலும நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.