

தனது மருத்துவ விவரங்களை வைத்து பணம் பண்ணுவதா என்று ஊடகங்களைக் கடுமையாகச் சாடியுள்ளார் அமிதாப் பச்சன்
இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனுக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வெளியானது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கல்லீரல் பிரச்சினை என்றும் பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதற்கான விசேஷமான அறையில் அவர் இருப்பதாகவும், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்கள்.
ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலுமே தெரிவிக்கப்படாததால் பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது அமிதாப் பச்சன் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து தனது tumblr இணையதளத்தில் அனைவரது பிரார்த்தனைக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும், அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அமிதாப் பச்சன் தன் ரசிகர்கள் தனக்காகச் சாலையில் பதாகைகள் ஏந்தி வாழ்த்து தெரிவித்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் தன் பேத்தியின் அரவணைப்புக்கு எதுவும் ஈடாகாது, அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை என அவருடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
இதோடு, தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் அதை வைத்து வந்த செய்திகள் குறித்து சற்றே காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
"தொழில்முறை ஆவணங்களை ஒட்டிய நடத்தை விதிகளை / தொழில் தர்மத்தை மீறாதீர்கள். ஒருவருக்கு உடலில் இருக்கும் பிரச்சினைகள், மருத்துவச் சிகிச்சைகள் பற்றிய விவரங்கள் எல்லாம் அந்த தனி நபரிடம் மட்டுமே இருக்க வேண்டிய தனிப்பட்ட உரிமை. அந்த விவரங்களை வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பதும், அதையொட்டிய சுரண்டலும் சட்டத்துக்குப் புறம்பானது. இதை மதித்து ஒழுங்காகப் புரிந்துகொள்ளுங்கள். இந்த உலகில் அனைத்தும் விற்பனைக்கல்ல" என்று அமிதாப் பச்சன் தனது வலைப்பூவில் பகிர்ந்துள்ளார்.