

நடிகர் அமிதாப் பச்சனின் ஆரோக்கியம் குறித்து வெவ்வேறு விதமான, உறுதி செய்யப்படாத தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஊடகத்தில் ஒரு தரப்பு, அவர் மும்பையில் நானாவதி மருத்துவமனையில் கல்லீரல் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருக்க, இன்னொரு தரப்பு இந்த செய்தி பொய்யானது என்று கூறுகின்றன.
ஆங்கில செய்தி இணையதளம் ஒன்றில், 77 வயது அமிதாப் பச்சன், அக்டோபர் 15-ம் தேதியில் இருந்து மருத்துவமனையில் உள்ளார். அன்று அதிகாலை 2 மணியளவில் அவர் நானாவதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கல்லீரல் பிரச்சினைக்கான சிகிச்சை நடந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக, விசேஷமான அறையில் தனியாக உள்ளார். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இன்னொரு இந்தி செய்தி இணையதளத்தில், அமிதாப் பச்சன் ஆரோக்கியம் குறித்த செய்திகள் அனைத்தும் தவறு என்றும், எப்போதும் போல வழக்கமான உடல் பரிசோதனைக்கே அவர் அங்கு இருக்கிறார் என்றும், அவர் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவரது சமூக வலைதள நடவடிக்கைகள் சான்று என்றும் குறிப்பிட்டுள்ளது.
வியாழக்கிழமை அன்று, அமிதாப் பச்சன், தானும், தன் மனைவி ஜெயாவும் இருக்கும் பழைய புகைப்படத்தில் ஜெயாவின் உருவத்தை மட்டும் வெட்டி எடுத்துப் பகிர்ந்திருந்தார். 1982ஆம் ஆண்டு, மன்மோஹன் தேசாயின் கூலி படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த மோசமான விபத்தில், அமிதாப் பச்சனின் கல்லீரல் 75 சதவீதம் சேதமடைந்தது.
அந்த விபத்துக்கான சிகிச்சையின் போது, ஹெபடிடிஸ் பி தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டார். சமீபத்தில் தாதா சாஹேப் பால்கே விருது வென்ற அமிதாப் பச்சன், தனியார் சேனலில் கவுன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியின் 11 சீசனை தொகுத்து வழங்க ஆரம்பித்திருந்தார். திரைப்படங்களைப் பொறுத்தவரை, ஷூஜிஜ் சிர்காரின் 'குலாபோ சிதாபோ', அயன் முகர்ஜியின் 'ப்ரஹ்மாஸ்த்ரா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
ஐ.ஏ.என்.எஸ்