

ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடிப்பில் வெளியான 'வார்' திரைப்படம், இந்த வருடம் வெளியான படங்களில் அதிக வசூல் பெற்ற படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
'மிஷன் இம்பாசிபிள்' போன்ற ஹாலிவுட் ஆக்ஷன் த்ரில்லர் படங்களின் பாணியில் இந்தியில் உருவான படம் 'வார்'. இதில் நாயகனாக ஹ்ரித்திக் ரோஷனும், முக்கியக் கதாபாத்திரத்தில் டைகர் ஷெராஃப், வாணி கபூர் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் இந்தப் படம் டப் செய்யப்பட்டு, 4,200 திரைகளில், அக்டோபர் 2-ம் தேதி வெளியானது.
அட்டகாசமான சண்டைக் காட்சிகளும், துரத்தல் காட்சிகளும், ஹாலிவுட்டுக்கு நிகரான சாகசக் காட்சிகளும் நிறைந்த இந்தப் படத்தின் திரைக்கதையில் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை. வெளியான முதல் நாளே, வெளியான மூன்று மொழிகளிலும் ரசிகர்களின் பாராட்டையும் ஆதரவையும் பெற்று 53.35 கோடி ரூபாயை வசூலித்தது.
தற்போது இந்தப் படம் மொத்தமாக 280 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக, பாலிவுட் வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது இதற்கு முன் இந்த வருடத்தின் அதிக வசூல் சாதனையைப் படைத்த 'கபீர் சிங்' படத்தின் ஒட்டுமொத்த வசூலாகும். 'வார்' இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கண்டிப்பாக ரூ.300 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.