பால்கே விருது பெற்றதற்கு கவுரவம்: கோவா சர்வதேச திரை விழாவில் அமிதாப் திரைப்படங்கள்: அமைச்சர் அறிவிப்பு

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்
Updated on
1 min read

புதுடெல்லி,

கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் தொடங்கப்பட உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்த சில முக்கியத் திரைப்படங்களும் இடம்பெறும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இன்று அறிவித்தார்.

இந்தியாவின் 50வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறுகிறது, இந்தியாவில் சர்வதேச திரைப்படவிழா தொடங்கி 50வது ஆண்டை பொன்விழா கொண்டாட்டமாக மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கோவா திரைப்பட விழா 2019 குறித்து செய்தியாளர்களிடம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:

இந்தியாவின் சர்வதேச திரைப்பட பொன்விழா ஆண்டில் கோவாவில் நடைபெற உள்ள இந்தத் திரை விழாவில்தான் முதலாவதாக, பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கும் ஆடியோ விளக்கத்துடன் திரைப்படங்களைத் திரையிடப்பட உள்ளது.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 50வது பொன்விழா ஆண்டில் நடத்தப்பெறும் இந்த திரைவிப்படவிழா மிகப்பெரிய அளவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தாதாசாகேப் பால்கே விருது வென்ற பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கவுரவம் அளிக்கும்வகையில் அவரது சீரியத் தன்மையுள்ள படங்களும் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு அம்சமுள்ள திரைப்படங்களும் ஒரு தனித் தொகுப்பாக திரையிடப் பட உள்ளது.

இந்த ஆண்டு இந்திய பனோரமாவில் 26 திரைப்படங்களும் 15 ஆவணப் படங்கள் உள்ளன.

திரைப்பட விழாவின் பொன்விழா ஆண்டைக் குறிக்கும் வகையில், 2019 ஆம் ஆண்டில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த பல்வேறு மொழிகளில் வெளியான முக்கியமான 12 படங்களும் திரையிடப்படும்.

உலகெங்கிலும் உள்ள சமீபத்திய கலை சினிமா ரத்தினங்களின் ஒரு சுரங்கங்கமாக இத் திரைப்பட விழா அமையும். அதேநேரம் பல புதிய முக்கிய பாலிவுட் திரைப்படங்களும் விழாவில் திரையிடப்படும். அவற்றில் 'யூரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்', 'கல்லி பாய்', 'சூப்பர் 30' மற்றும் 'பதாய் ஹோவா' ஆகியவை அடங்கும்.

இந்த ஆண்டு, படத் தேர்வுக்கும் சிறந்த பட விருதுக்கான படங்களை தேர்ந்தெடுக்கவும் சிறப்பு திரைப்பட இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளருமான பிரியதர்ஷன் தலைமையில் சிறப்பு திரைப்பட ஜூரி தலைமை தாங்குகிறது. இந்திய பனோரமாவின் தொடக்கவிழாப் படமாக அபிஷேக் ஷாவின் குஜராத்தி திரைப்படமான 'ஹெலாரோ' ஐ ஜூரிக்குழு தேர்வு செய்துள்ளது.

பிரபல ஆவணப்பட இயக்குநர் ராஜேந்திர ஜாங்லே தலைமையிலான ஜூரிக்குழு ஆஷிஷ் பாண்டேவின் 'நூரே' ஆவணப்படத்தை இந்திய பனோரமாவின் ஆவணப் படப் பிரிவில் தொடக்க படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மொத்தத்தில், ஐ.எஃப்.எஃப்.ஐயின் பொன்விழாவில் 10,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in