Published : 05 Oct 2019 06:08 PM
Last Updated : 05 Oct 2019 06:08 PM

மும்பை ஆரே காலனியில் மரங்கள் வெட்டப்படுவதற்கு பாலிவுட் பிரபலங்கள் எதிர்ப்பு

மும்பையில் மெட்ரோ பணிகளுக்காக ஆரே காலனியில் உள்ள 2,600 மரங்கள் வெட்டப்படுவதற்கு பாலிவுட் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆரோ காலனியில் உள்ள மரங்களைப் பாதுகாப்பதற்காக பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மும்பையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆரே காலனி பகுதியில் உள்ள 2,600 மரங்களை வெட்டக்கூடாது என தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆர்வலர்கள் தாக்கல் செய்திருந்த 4 மனுக்களை நேற்று மாலை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் மரங்கள் அடர்ந்த ஆரே காலனி ஒரு வனப்பகுதி அல்ல எனவும் நீதிமன்றம் கூறியது. இதனை அடுத்து வெள்ளிக்கிழமை இரவு ஆரோ காலனியில் நுழைந்த புல்டவுசர்கள் மரங்களை வெட்டும் பணிகளைத் தொடங்கின.

மரங்கள் வெட்டப்படுவதாகத் தகவல் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த ஆரே காலனி மக்கள் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 38 பேர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்திய அளவில் நெட்டிசன்கள் #saveAarey என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆரே காலனியில் மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சித்தார்த் மல்ஹோத்ரா

ஆரே காலனியில் நேற்றிரவு மரங்கள் வெட்டப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டேன். இதனால் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வு கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. இது நிறுத்தப்பட வேண்டும். நமக்காக இல்லாவிட்டாலும் எதிர்காலத் தலைமுறையினருக்காக.

அலியா பட்

வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு இடையே எப்போதும் பிளவு இருக்கிறது. இந்த நகரத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு கட்டுமானங்களை ஏற்படுத்துவது அவசியம். ஆனால் இதே நகரத்துக்கு பூங்காவும், மரங்களும் தேவை. நாம் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும. ஏனெனில் வாழ்க்கை அதனைச் சார்ந்தது.

வருண் தவான்:
இது இதயத்தை உடைக்கும் செய்தி. இது குடிமக்கள் விரும்பாத ஒன்று.

ஷ்ரத்தா கபூர்

இது தவறு.. இது நடக்கக்கூடாது

இவ்வாறு பாலிவுட் பிரபலங்கள் பலர் பதிவிட்டுள்ளனர். ஃபரான் அக்தர், ஸ்வரா பாஸ்கர், ஊர்மிளா உட்பட பலரும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x