

'காஞ்சனா' இந்தி ரீமேக்கான 'லட்சுமி பாம்' படத்தில் அக்ஷய் குமாரின் திருநங்கை லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த படம் ‘காஞ்சனா’ வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
'லட்சுமி பாம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ராகவா லாரன்ஸ் இயக்கி வருகிறார். முதலில் ஏற்பட்ட பிரச்சினையில் இந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியவர், தற்போது மீண்டும் சமரசமாகி இயக்கி வருகிறார்.
'காஞ்சனா' படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார் சரத்குமார். இந்தக் கதாபாத்திரத்தில் இந்தியில் யார் நடிக்கவுள்ளார் என்பது முடிவாகவில்லை. இதில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியானாலும், படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
அதே போல், 'காஞ்சனா' படத்தில் லாரன்ஸும் சில காட்சிகளில் திருநங்கையாகத் தோன்றுவார். அதே போல் அக்ஷய் குமாரும் திருநங்கையாக நடித்துள்ளார். இந்த லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, "நமக்குள் இருக்கும் பெண் தெய்வத்தை வணங்கி நமது அளவில்லா வலிமையைக் கொண்டாடுவதுதான் நவராத்திரி.
இந்த மங்களகரமான நாளில் எனது 'லக்ஷ்மி' தோற்றத்தை உங்களுடன் பகிர்கிறேன். இந்தக் கதாபாத்திரத்தை நான் ஆர்வமாக எதிர்நோக்கும் அதே நேரத்தில் பதட்டமாகவும் உணர்கிறேன். நாம் சவுகரியமாக உணரும் சூழலின் முடிவில்தான் வாழ்க்கை தொடங்குகிறது இல்லையா?" என்று தெரிவித்துள்ளார் அக்ஷய் குமார். அடுத்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.