பிரபல பாலிவுட் நடிகர் விஜு கோட் மறைவு

மறைந்த நடிகர் விஜு கோட், விஜு கோட் ஷோலே படத்தில் தோன்றும் காட்சி.
மறைந்த நடிகர் விஜு கோட், விஜு கோட் ஷோலே படத்தில் தோன்றும் காட்சி.
Updated on
1 min read

மும்பை

மூத்த பாலிவுட் நடிகர் 'ஷோலே' புகழ் விஜு கோட், உடல்நிலை மோசமான நிலையில் மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 77.

ஷோலே (1975) படத்தில் நாடோடி கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்த கலியா என்ற கதாபாத்திரத்தில் தோன்றி அவர் மிகவும் ஸ்டைலாகப் பேசும் ''சர்தார் மெய்னே ஆப்கா நாமக் கயா ஹை'' என்ற வசனம் மிகவும் பிரபலம் ஆகும். அதே போல 'அண்டாஸ் அப்னா அப்னா' (1994) படத்தில் ''கால்டி சே மிஸ்டேக் ஹோகயா'' என்று அவர் வசனமும் மிகவும் பிரபலமானது.

மராட்டிய மேடை நாடகங்கள் மூலம் கலைத்துறையில் நுழைந்த விஜு கோட் 1964-ல் 'யா மாலக்' என்ற மராத்தி மொழி திரைப்படத்தின் வழியே காலடி எடுத்துவைத்து தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களிலும் வலம் வந்தார். எனினும் மேடை நாடகங்களை அவர் மறக்கவில்லை. தொடர்ந்து மராத்தி தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்றே அறியப்பட்டார்.

விஜு கோட் மராத்தி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ’கயாமத் சே கயாமத் தக்’, ’வென்டிலேட்டர்’ போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ’ஜபான் சம்பல்கே’ போன்றவற்றிலும் கோட் நடித்தார்.

இதுகுறித்து அவரது மருமகளும் நடிகையுமான பாவனா பால்சவர் பிடிஐயிடம் கூறுகையில், "விஜு கோட் இன்று காலை 6.55 மணியளவில் தனது தூக்கத்தில் நிம்மதியாக காலமானார். அவர் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவருக்கு பல உறுப்பு செயலிழப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் இறக்க விரும்பவில்லை. எனவே சில நாட்களுக்கு முன்பு நாங்கள் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தோம். இது எங்கள் அனைவருக்கும் பெரும் இழப்பாகும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in