

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த உலகின் மிகவும் வயதான துப்பாக்கி சுடும் வீராங்கனைகளான சந்திரோ டோமா மற்றும் பிரகாஷி தோமரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் 'சாந்த் கி ஆங்க்'. துஷார் ஹிரானந்தானி இயக்கியுள்ள இந்தப் படத்தில் டாப்ஸி, பூமி பெட்நேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சந்திரோ டோமா மற்றும் பிரகாஷி தோமர் இருவரும் தங்களின் 65-வது வயதுக்குப் பிறகு துப்பாக்கி சுடுதலில் 30க்கும் மேற்பட்ட சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளனர். சமூகக் கற்பிதங்களை உடைத்து இவர்கள் இருவரும் எப்படி தங்கள் இலக்கை அடைந்தனர் என்பதே இப்படத்தின் கதை.
’சாந்த் கி ஆங்க்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து டாப்ஸி ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:
சந்திரோ டோமா மற்றும் பிரகாஷி தோமரின் கதையைக் கேட்கும்போது என் தாயைப் பற்றிய நினைவுகள் வந்ததை என்னால் தடுக்க முடியவில்லை. ஏனெனில் இது குடும்பம், பெற்றோர், கணவர், குழந்தைகளுக்காக தங்கள் வாழ்க்கையை வாழாத பெண்களின் கதை. என் அம்மாவுக்கு 60 வயதாகிறது. இந்தக் கட்டத்தில் அவர் தன்னுடைய வாழ்க்கையை விரும்பியபடி வாழ்வதற்கு நான் காரணமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் அவருக்கு அது கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இந்தப் படத்தை என் அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தப் படத்தை அனைவரும் தங்கள் அம்மா, பாட்டிகளுடன் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த தீபாவளி உண்மையில் ஒரு குடும்ப தீபாவளியாக திரையரங்கங்களில் இருக்கப் போகிறது. இரண்டு நாயகிகள் இருக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. 10 வினாடிகளிலேயே சம்மதம் தெரிவித்துவிட்டேன். சந்திரோ டோமா மற்றும் பிரகாஷி தோமர் இருவரும் இந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருப்பார்கள்”.
இவ்வாறு டாப்ஸி பேசினார்.
’சாந்த் கி ஆங்க்’ வரும் அக்டோபர் 25-ம் தேதி வெளியாகவுள்ளது.