

கரண் ஜோஹரின் பார்ட்டியில் என்ன நடந்தது என்பது பற்றி நடிகர் விக்கி கவுஷல் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் கரண் ஜோஹர் வீட்டில் நடந்த பார்ட்டி பற்றி ஏற்கெனவே பெரிய சர்ச்சை எழுந்தது. அந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியானது. அதில் அங்கிருந்த நட்சத்திரங்கள் பலரும் போதை மருந்து உட்கொண்டது போலத் தெரிவதாக பலர் குற்றம் சாட்டியிருந்தனர்.
இது குறித்து சமீபத்தில் கரண் ஜோஹர் விளக்கம் அளித்திருந்தார். தற்போது அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட விக்கி கவுஷலும் சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் அது பற்றிப் பேசியுள்ளார்.
''அந்த பார்ட்டிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு வரை எனக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது. 10 நாட்களுக்கு நான் எந்தப் படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளவில்லை. சரியான பிறகு கரண் அந்த பார்ட்டிக்கு அழைத்திருந்தார். நான் அங்கு சென்றேன். அந்த வீடியோவை எடுக்கும் ஐந்து நிமிடங்களுக்கு முன் தான் கரணின் தாய் வந்து அனைவரின் தலையில் கங்கை நீரைத் தெளித்து விட்டுச் சென்றார்.
மேலும் அது முதல் முறை எடுக்கப்பட்ட வீடியோ அல்ல. மூன்றாவது முறை எடுக்கப்பட்டதால் நாங்கள் அனைவரும் சோர்வாகிவிட்டோம். அதுதான் அப்படித் தெரிகிறது. போதை அல்ல. இவ்வளவு பெரிய இயக்குநர் கரண் ஜோஹர் நாங்கள் போதை மருந்து உட்கொண்டிருந்தால், அதை அவரே படம் பிடித்து தனது பக்கத்தில் போடுவாரா?
நான் மூக்கு சொறிந்தது எல்லோரும் செய்வதைப் போலத்தான். அதையும் போதை மருந்தோடு சம்பந்தப்படுத்துவார்கள் என்று எனக்குத் தெரியாது. அந்த பார்ட்டிக்கு அடுத்த நாள் நான் தவாங்க் சென்றேன். ராணுவ வீரர்களைச் சந்தித்தேன். அங்கு இண்டர்நெட் இணைப்பு சரியாக இல்லாத காரணத்தால் அன்று பார்ட்டி பற்றி வந்த செய்திகள் எனக்குத் தெரியாது. வீட்டுக்கு வந்து அறிந்த போது அதிர்ச்சியடைந்தேன்.
மக்கள் தங்கள் யூகங்களை வளர்ப்பது நல்லதல்ல. நான் சட்டத்துக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நான் ஏதாவது தெளிவுபடுத்த வேண்டுமென்றால் அங்கு பதில் சொல்வேன். தெரியாத ஒருவரைப் பற்றி யூகம் செய்யலாம். ஆனால் அதை உண்மை என்று பேசக்கூடாது.
இதற்கு முன் இதுபோன்ற அவசர கதி குற்றச்சாட்டுகளுக்கு அவசர கதியில் பதில் சொல்ல வேண்டாம் என்று நினைத்தே இதற்கு பதில் சொல்லாமல் இருந்தேன்’’.
இவ்வாறு விக்கி கவுஷல் விளக்கம் அளித்தார்.