

மும்பை
ஆஸ்கர் விருதுப் போட்டிக்கான பரிந்துரையில் பாலிவுட் திரைப்படமான 'கல்லி பாய்' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை தன்னால் நம்பமுடியவில்லை என்று நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளார்.
சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இடம்பெறும் பரிந்துரை பட்டியலில் பாலிவுட் திரைப்படமான 'கல்லி பாய்' இடம்பெற்றுள்ளது. இந்தியா சார்பாக அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நேற்று இதற்கான தேர்வுக்குழு அறிவித்தது.
'கல்லி பாய்' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு படக்குழுவினர் மட்டுமல்ல பாலிவுட், இந்திய திரைப்பட ரசிகர்களும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மும்பை தாராவியை மிகவும் யதார்த்தமாக மிகை புனைவுகள் ஏதுமின்றி இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது இப்படத்தின் பலம். மேலும் இப்படத்தின் அசல் தன்மை, சுறுசுறுப்பு மற்றும் வளரிளம் பருவ இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் கதை அம்சத்தால் தான் ஈர்க்கப்பட்டதாக படத்தைத் தேர்வு செய்த குழுவின் தலைவரான அபர்ணா சென் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் வாழ்க்கையில் ஏதோ ஓர் அங்கீகாரத்திற்காகப் போராடும் இளைஞனாக ரன்வீர் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. பொறுப்பற்ற தந்தை, அலட்சியம் காட்டும் சித்தி என்ற சூழலில் ரன்வீர் கதாபாத்திரம் உண்மையான நேசத்திற்காகவும் ஏங்குகிறது. ரன்வீரைப் புரிந்துகொள்ள தோல்வியடைந்து பின்னர் எப்போதாவது நட்பு காட்டும் தோழியாக ஆலியா பட் நடித்துள்ள விதம் மிகமிக யதார்த்தமானது.
படம் முழுக்க அந்தாக்ஷரி பாணியில் அமைந்த ராப் பாடல்களை வீதிகளில் பாடித் திரியும் இளைஞன் பொது சபைகளில் பெரிய அங்கீகாரம் பெரும் காட்சிகள் காண்போரை உணர்வுவயப்படும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை இயக்கியுள்ள சோயா அக்தர் 2009-ல் தனது முதல் படமான 'லக் பை சான்ஸ்' படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அடியெடுத்து வைத்தார். 'கல்லி பாய்' சோயா அக்தரின் நான்காவது படம். புகழ்பெற்ற பாலிவுட் திரைப்படப் பாடலாசிரியரான ஜாவேத் அக்தரின் மகள் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரியில் வெளியாகி கல்லி பாயின் இதுவரையிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.238.16 கோடி ஆகும்.
'கல்லி பாய்' ஆஸ்கர் பரிந்துரை பெற்றது குறித்து இப்படத்தின் நாயகியான பாலிவுட் நடிகை அலியா தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஆலியா கூறுகையில், ''என்னால் உண்மையில் நம்ப முடியவில்லை. இப்படம் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது வியப்பாக உள்ளது. ஆஸ்கர் விருதுக்குச் செல்லும் எனது முதல் படம் இது. அதனால் இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. எனது உணர்வுகளை இப்போது என்னால் சொல்ல முடியவில்லை. 'கல்லி பாய்' படக் குழுவினருக்கும் ஓர் அற்புதமான தருணம் இது.
இதையெல்லாம் கடந்து ஆஸ்கர் விருதுப் போட்டிகளில் இறுதியாகத் தேர்வாகும் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஐந்து இறுதிப் பரிந்துரைகளுக்கு நாங்கள் வருவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.