

மும்பை, ஐ.ஏ.என்.எஸ்.
தி கார்டியனின் 21ம் நூற்றாண்டின் 100 டாப் திரைப்படங்களில் ஒரேயொரு இந்தியப் படம் இடம்பெற்றிருக்கிறது என்றால் அது அனுராக் காஷ்யபின் ‘கேங்ஸ் ஆஃப் வாசிபூர்’ மட்டுமே.
இன்ஸ்டாகிரமில் இதனை அறிவித்த காஷ்யப், தன் படம் 59வது இடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“இந்தப் பட்டியலில் இருப்பது பெருமைதான், ஆனால் இது என்னுடைய பட்டியலாக இருக்காது, எனக்குப் பிடித்த பல படங்கள் பட்டியலில் என் படத்துக்குக் கீழே இருத்தல் கூடாது டார்க் நைட்ஸ் படம் என் படத்துக்கு மேலே இருக்க வேண்டிய ஒன்று. இந்தப் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் படத்தை ஏற்கிறேன். 21ம் நூற்றாண்டின் எனக்கு பிடித்தது அந்தப் படம்தான்” என்று பதிவிட்டுள்ளார்.
காஷ்யப் கூறும் அவருக்குப் பிடித்த முதலிடம் பிடித்த படம், ‘டேனியல் டே-லூயிஸ் நடித்த “தேர் வில் பி பிளட்ஸ்” படம்தான் தி கார்டியன் பட்டியலில் முதலிடம் பிடித்த படம்.
விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்ற, பெர்செபோலீஸ், வால்ட்ஸ் வித் பஷீர், கேப்பர்நாம் ஆகிய படங்களும் பட்டியலில் உள்ளன.
கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத் தொடரின் 2 பாகங்களும் 2012-ல் வெளியாகின. ஜார்கண்ட் தன்பாத் மாவட்டத்தில் உள்ள வாசிப்பூரின் நிலக்கரிச் சுரங்க மாஃபியா குடும்பத்தைப் பற்றிய படமாகும் இது. இந்தப் படங்களை வெகுமக்கள் ரசித்ததோடு சினிமா அழகியலுக்காகவும் கொண்டாடப்பட்டது.
இந்த கேங் போர் படத்தில் மனோஜ் பாஜ்பாயி, நவாசுதீன் சித்திக்கி, பியூஷ் மிஷ்ரா, மற்றும் ரிச்சா சத்தா ஆகியோரும் நடித்துள்ளனர்.