செய்திப்பிரிவு

Published : 11 Sep 2019 12:47 pm

Updated : : 11 Sep 2019 12:47 pm

 

'அர்ஜுன் ரெட்டி' இயக்குநரின் அடுத்த படத்தில் ரன்பீர்?

ranbir-casting-in-arjun-reddy-director-next-film

'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கிய சந்தீப் வாங்காவின் புதிய படத்தில் ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. சந்தீப் வாங்கா ரெட்டி இயக்கிய இந்தப் படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. விஜய் தேவரகொண்டாவுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

'அர்ஜுன் ரெட்டி' பெற்ற வெற்றியால் இப்படத்தை தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஷாஹித் கபூர், கியாரா அத்வானி நடிப்பில் உருவான இந்தி ரீமேக்கான ’கபீர் சிங்’ படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

'அர்ஜுன் ரெட்டி'யின் தமிழ் ரீமேக்கான ‘ஆதித்ய வர்மா’வில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார். நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 'அர்ஜுன் ரெட்டி' இயக்குநர் சந்தீப் வாங்காவிடம் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சந்தீப் வாங்காவின் புதிய படத்தில் ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ’கபீர் சிங்’ படத்தைத் தயாரித்த பூஷன் குமாரிடம் இப்படத்தின் கதையை சந்தீப் வாங்கா கூறியதாகவும், கதை அவருக்குப் பிடித்துவிட்டதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. க்ரைம் த்ரில்லர் களத்தைக் கொண்ட இப்படத்தில் நடிக்க ரன்பீர் கபூர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்சமயம் ரன்பீர் கபூர் 'பிரம்மஸ்திரா’, ’ஷம்ஷேரா’ படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு முடிந்த கையோடு சந்தீப் வாங்காவின் புதிய படத்தில் ரன்பீர் கபூர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அர்ஜுன் ரெட்டிசந்தீப் வாங்காரன்பீர் கபூர்கபீர் சிங்ஆதித்ய வர்மா
Popular Articles

You May Like

More From This Category

More From this Author