

தான் இன்னமும் எந்தப் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்று நடிகர் ஷாரூக் கான் சொன்னதை அடுத்து அவரது ரசிகர்கள் ட்விட்டரில் புதுவிதமாக கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டனர்.
கடைசியாக ஷாரூக் கான் நடிப்பில் வெளியான படம் ‘ஜீரோ’. கடந்த ஆண்டு டிசம்பரில் இப்படம் வெளியானது. ஆனால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் தோல்வியைத் தழுவியது. நடுவில் 'லயன் கிங்' படத்தின் இந்தி டப்பிங்கில், தனது மகனுடன் இணைந்து குரல் கொடுத்தத்தைத் தாண்டி இன்று வரை ஷாரூக் கான் புதிதாக எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.
‘சுல்தான்’ , 'பாரத்’ ஆகிய பாலிவுட் படங்களை இயக்கிய அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் ஷாரூக் கான் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கிறார் என்றும் வந்த செய்திகளை வெறும் புரளி என்று தெளிவுபடுத்திவிட்டார் ஷாரூக் கான்.
இதைத் தொடர்ந்து பொறுமையிழந்த ஷாரூக்கின் ரசிகர்கள், #WeWantAnnoucementSRK (எங்களுக்கு அறிவிப்பு வேண்டும் ஷாரூக் கான்) என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்க ஆரம்பித்துவிட்டனர். திங்களன்று சில மணி நேரங்கள் முதலிடத்தில் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருந்தது.
"உங்கள் முந்தைய படம் தோல்வியுற்றாலும் என்றும் உங்கள் அடுத்த படம் பற்றிய ஆர்வம் ரசிகர்களிடையே இருக்கும்".
"உங்களைத் திரையில் பார்க்க முடியாமல் இருப்பது குறித்து வருந்துகிறோம்".
"குடும்பத்துக்காக நேரம் செலவிட்டது போதும், சீக்கிரம் நடியுங்கள்".
"உங்கள் படத்தைப் பார்த்து வளர்ந்தவள் நான், அதைப் பார்த்துதான் காதல் செய்யக் கற்றுக்கொண்டேன், மீண்டும் ஒரு காதல் படத்தில் நடியுங்கள்"
எனப் பல்லாயிரக்கணக்கான ட்வீட்டுகள் பகிரப்பட்டன. ஷாரூக் கான், ரசிகர்களின் இந்தச் செயல் குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
- ஏஎன்ஐ