

'தலைவி' படக்குழுவுக்கு கங்கணா வைத்த கோரிக்கையை ஏற்று, இந்திப் பதிப்புக்கும் 'தலைவி' என்றே பெயரிட்டுள்ளனர்.
விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிக்கவுள்ள படம் 'தலைவி'. இது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட படமாகும். இதில் ஜெயலலிதாவாக நடிக்கவுள்ளார் கங்கணா ரணாவத்.
இந்தப் படத்துக்காகவே தமிழ், பரதநாட்டியம் கற்று வருகிறார் கங்கணா. இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்புகளுக்கு 'தலைவி' என்றும், இந்திப் பதிப்புக்கு 'ஜெயா' என்று தலைப்பிட்டு இருந்தது படக்குழு.
விரைவில் படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமாகி வருகிறது படக்குழு. ஆனால், கங்கணா ரணாவத்தோ தமிழ், தெலுங்கு மொழிகளில் இருக்கும் 'தலைவி' என்ற தலைப்பே இந்தியிலும் இருக்கட்டும். அப்போது தான் மக்களுக்குப் புரியும் என்று படக்குழுவினருக்கு எடுத்துரைத்துள்ளார்.
மேலும், ஹாலிவுட் படங்களும் இந்தியாவில் அதே பெயரில் வெளியாகும் போது, நாம் ஏன் மொழிக்கு மொழி பெயரை மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். கங்கணாவின் பார்வை சரியாக இருந்ததால் இந்தியிலும் 'தலைவி' என்ற பெயரையே வைத்துவிட்டது படக்குழு. தற்போது அனைத்து மொழிகளிலும் 'தலைவி' என்ற பெயரிலேயே இந்தப் படம் உருவாகவுள்ளது.