Published : 07 Sep 2019 02:40 PM
Last Updated : 07 Sep 2019 02:40 PM

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் வாழ்த்து 

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் சமூக வலைதளங்களில் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

'சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

’சந்திரயான் - 2’ விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிரங்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அமிதாப் பச்சன்: எங்கள் பெருமை, எங்கள் வெற்றி. இஸ்ரோவை நினைத்து பெருமை கொள்கிறோம்.

ஷாரூக் கான்: சில நேரங்களில் நாம் வேண்டிய இலக்கை அடைவதில்லை. இதில் முக்கியமானது என்னவென்றால் நம்மால் முடியும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். நமது தற்போதைய நிலைமை முடிவு அல்ல. நம்புங்கள்.

அக்‌ஷய் குமார்: சோதனை இல்லாமால் அறிவியல் இல்லை. சிலவற்றில் நாம் வெற்றி பெறுவோம். சிலவற்றில் நாம் கற்றுக் கொள்வோம். நாம் மீண்டு வருவோம். இதன் பின்னணியில் உள்ளவர்களுக்கு சல்யூட். விரைவில் சந்திரயான் 2, சந்திரயான் 3க்கான வழியை ஏற்படுத்தும்.

கரண் ஜோகர்: இஸ்ரோவுக்கு சல்யூட்... உங்களைக் கண்டு பெருமை கொள்கிறோம்.

அஜய் தேவ்கன்: இன்று இந்தியா நம்பிக்கை மற்றும் பெருமையுடன் ஒற்றுமையாக இருக்கிறது.

இவர்கள் மட்டுமல்லாது லதா மங்கேஷ்கர், சன்னி தியோல் ஆகியோரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, நிலவை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது.

சந்திரயான்-2 விண்கலம் மொத்தம் 3,850 கிலோ எடை கொண்டது. இதில், தொடர்ந்து நிலவைச் சுற்றி வரக்கூடிய ‘ஆர்பிட்டர்’, நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் ‘விக்ரம்’ என்ற லேண்டர் கலம், நிலவில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பிரக்யான்’ என்ற ரோவர் வாகனம் என 3 அதிநவீன சாதனங்கள் உள்ளன.

இந்நிலையில் ’சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x