

தங்கள் குடும்பத்தின் சொந்தத் தயாரிப்பான ‘பூம்’ திரைப்படம் அடைந்த தோல்வியால் தங்கள் குடும்பம் சந்தித்த இழப்புகள் குறித்து ஜாக்கி ஷெராஃபின் மகனும், பாலிவுட் நடிகருமான டைகர் ஷெராஃப் மனம் திறந்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃபின் மனைவி ஆயிஷா ஷெராஃப் தயாரிப்பில் அமிதாப் பச்சன், கத்ரீப்னா கைஃப் நடித்து கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பூம்’. தியேட்டரில் வெளியாவதற்கு முன்பாகவே திருட்டு விசிடி மூலம் கசிந்ததால் பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்தது.
அப்படத்தின் தோல்வியால் தங்கள் குடும்பம் சந்தித்த இழப்பு குறித்து ஜாக்கி ஷெராஃபின் மகனும், பாலிவுட் நடிகருமான டைகர் ஷெராஃப் மனம் திறந்துள்ளார்.
மாத இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் டைகர் ஷெராஃப் கூறியிருப்பதாவது:
''எங்கள் வீட்டில் இருந்த ஃபர்னிச்சர்கள் ஒவ்வொன்றாக விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. நான் பார்த்து வளர்ந்த பொருட்கள் காணாமல் போகத் தொடங்கின. ஒருநாள் எங்கள் கட்டிலும் காணாமல் போனது. நான் தரையில் படுத்து உறங்கத் தொடங்கினேன். என் வாழ்க்கையின் மோசமான காலகட்டம் அது.
ஷாரூக் கானை ’காதல் மன்னன்’ என்று அழைப்பார்கள். சல்மான் கானை ‘பாய்ஜான்’ (அண்ணன்) என்று அழைப்பார்கள். இங்கே ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு அடைமொழி உண்டு. போட்டி மிகுந்த இந்தத் துறையில் அதுதான் மிக முக்கியம். ஒவ்வொரு முறையும் வழக்கத்துக்கு மாறாக நான் ஏதாவது செய்யும்போது ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.
’எ ஃப்ளையின் ஜாட்’ படத்தில் உயரம், சண்டை ஆகியவற்றுக்குப் பயப்படும் ஒரு சூப்பர் ஹீரோவாக நடித்தேன். ’ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் 2’வில் கல்லூரி நண்பர்களால் ராகிங் செய்யப்படும் ஒருவனாக நடித்தேன். இவையெல்லாம் ரசிகர்களிடம் எடுபடவில்லை”.
இவ்வாறு டைகர் ஷெராஃப் கூறியுள்ளார்.
ஹ்ரித்திக் ரோஷனுடன் டைகர் ஷெராஃப் இணைந்து நடிக்கும் ஆக்ஷன் படமான ‘வார்’ வரும் அக்டோபர் 2-ம் தேதி அன்று இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.