

மும்பை
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை சந்திப்பதற்காக 900 கிமீ நடந்தே சென்றுள்ளார் அவரது தீவிர ரசிகர் ஒருவர்.
இந்தியில் ரவுடி ரத்தோர், கப்பார் சிங், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் அக்ஷய் குமார். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ’2.0’ படத்திலும் வில்லனாக நடித்து பாராட்டுக்களை அள்ளியவர். இவர் நடிப்பில் வெளியான ’பேட்-மேன்’ (pad-man) படத்துக்கு இந்த ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக்ஷய் குமார் நடித்து கடந்த சுதந்திர தினம் அன்று வெளியான ‘மிஷன் மங்கல்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இந்நிலையில் அக்ஷய் குமாரை சந்திக்க அவரது தீவிர ரசிகர் ஒருவர் குஜராத் மாநிலத்தின் ட்வார்கா நகரிலிருந்து மும்பைக்கு 900 கிமீ நடந்தே சென்றுள்ளார். அக்ஷய்குமாரின் வீட்டை அடைய அந்த ரசிகருக்கு 18 நாட்கள் ஆகியிருக்கிறது. இதை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷய் குமார் வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
”ட்வார்காவிலிருந்து வந்திருக்கும் பர்பாட். இவரை இன்று சந்தித்தேன். ட்வார்காவிலிருந்து மும்பைக்கு 900 கிமீ நடந்தே வந்து என்னை சந்திக்க வந்திருக்கிறார். மும்பையை அடைய இவருக்கு 18 நாட்கள் ஆகியிருக்கிறது. நமது இளைஞர்கள் தங்கள் இலக்கை அடைய இது போன்ற திட்டங்களோடும் உறுதியோடும் இருந்தால் நம்மை யாரும் தடுக்க முடியாது.” இவ்வாறு அக்ஷய் குமார் தனது பதிவில் கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய மற்றொரு பதிவில், ”உங்கள் அனைவரையும் சந்திப்பது எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. நீங்கள் எனக்கு தரும் அன்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். ஆனால் இது போன்ற விஷயங்களை செய்யவேண்டாம் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நேரத்தையும், சக்தியையும் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்துங்கள். அதுதான் எனக்கு மகிழ்வை தரும். பர்பாட்டுக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.