

நடிகர் ஆமிர்கானின் மகள் ஐரா கான் விரைவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான ஆமிர்கானுக்கும் அவரது முதல் மனைவி ரீனா தத்தாவுக்கும் பிறந்தவர் ஐரா கான். ஐரா இசை குறித்து படித்துள்ளார். இவரது சகோதரர் ஜுனைத் ஆமிர்கானின் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
தற்போது ஐரா கான் யூரிபிடீஸ் மெடீயா என்கிற மேடை நாடகம் மூலம் இயக்குநராகிறார். இந்த வருடம் டிசம்பர் மாதம் இந்த நாடகம் இந்தியாவில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் மேடையேறவுள்ளது.
சமீபத்தில் ஒரு தினசரிக்கு அளித்த பேட்டியில் ஐரா தனக்கு எப்போதுமே நடிக்க ஆர்வம் இருந்ததில்லை என்று கூறியிருந்தார். மேலும் "திரைக்குப் பின்னால் வேலை செய்வதுதான் எனக்கு சவுகரியமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. முன்னால் அல்ல. ஆக்ஷன் படமென்றால் மட்டுமே நடிக்க விருப்பம், ஏனென்றால் அதில் சண்டைக் காட்சிகளில் நடிக்கலாம். மேலும், ஒரு படத்தில் நடிக்காமல் கூட சண்டைப் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம் தானே" என்று பேசியிருந்தார்.
ஐரா இந்த நாடகம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், விரைவில் நாடகக் குழு ஒத்திகைகளைத் தொடங்கவுள்ளது என பாலிவுட் விமர்சகர் மற்றும் வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.