

'ஸ்கை இஸ் பின்க்' படத்தின் இயக்குநர் ஷோனாலி போஸ், சட்டப்பிரிவு 370 குறித்து விரிவான குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். மேலும் நடிகை ஸாய்ரா வாசிம் நலன் குறித்தும், காஷ்மீர் நிலை குறித்தும் கவலை கொள்வதாக தெரிவித்துள்ளார்.
'ஸ்கை இஸ் பின்க்' படத்தில் ஸாய்ரா வாசிம் நடித்துள்ளார். இதுவே அவர் நடிக்கும் கடைசி படம். மத ரீதியான காரணங்களுக்காக இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என ஸாய்ரா ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
தற்போது 'ஸ்கை இஸ் பின்க்' இயக்குநர் ஷோனாலி போஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸாய்ராவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தோடு விரிவான பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
"ஜம்மு மற்றும் காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத அளவு தகவல் தொலைத்தொடர்பு முடக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிறது. இந்திய ஜனநாயகத்தின் மீது கரு மேகங்கள் சூழ்ந்திருக்கும் இந்த வேளையில் எனது இதயம் கனக்கிறது.
90- களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்திலிருந்தே காஷ்மீரில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை பார்த்து என் இதயம் வலித்துள்ளது. இளைஞர்கள் காணாமல் போவதும், கொல்லப்படுவதும் புதிதல்ல. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடும் புதிதல்ல.
ஆனால் கடுமையான செயல்களால் இந்த அரசாங்கம் எல்லா எல்லைகளையும் தாண்டி விட்டது. ஒவ்வொரு இந்தியனையும், ஒவ்வொரு வங்காளன், ஒவ்வொரு மராட்டியன், ஒவ்வொரு குஜராத்தி, ஒவ்வொரு தமிழரையும் நான் கேட்க விரும்புகிறேன். ஒரே ராத்திரியில் உங்கள் மாநிலம் இரண்டாக பிளக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டால் எப்படி உணர்வீர்கள்?
இப்போதைக்கு சட்டப்பிரிவு 370-ஐ விட்டுவிட்டு இதற்கு மட்டும் நேர்மையாக பதில் சொல்லுங்கள். அரசியலமைப்பிற்கு விரோதமான இந்த செயல் மீது எனக்கு அதிர்ச்சி, கோபத்தோடு, நமது நாட்டில் இருக்கும் சொந்த மக்கள் எப்படி உணர்ந்துகொண்டிருப்பார்கள் என்பதை நினைத்து வருத்தமாகவும் இருக்கிறது. நம்மால் கற்பனை செய்து மட்டுமே பார்க்க முடிகிற உணர்வு. இன்னும் அங்கு இயல்புவாழ்க்கை முடங்கியுள்ளது.
தனிப்பட்ட முறையில் இதற்கு முன் அந்தப் பகுதியைச் சேர்ந்த யாரையும் எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது எனக்கு அங்கு ஒரு குழந்தை இருக்கிறாள். ஸாய்ரா வாசிம் - 'தி ஸ்கை இஸ் பின்க்' படத்தின் இதயமும், ஆன்மாவும் இவர்தான். அவரையும், அவர் குடும்பத்தையும் எனக்கு ஒரு வருடத்துக்கும் அதிகமாகத் தெரியும். ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் அவர்களுடன் நல்ல சிறப்பாக நாட்கள் செலவிட்டுள்ளேன்.
இது நடப்பதற்கு முன்னாள் நான் அவர்களுடன் ஜம்முவில் இருந்தேன். திடீரென ராணுவம் குவிக்கப்பட்டதால் ஏதோ பெரிய ஆபத்து நடக்கப்போகிறது என ஸாய்ரா மிகவும் கவலைகொண்டார். இதுவரை காணப்படாத அரக்கத்தனமான விஷயங்கள் அங்கு நடக்கும் என்பது தெரியாமல் நான் அவருக்கு ஆறுதல் சொன்னேன்.
அப்போதிலிருந்து இப்போதுவரை, அவரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு, இந்த கடுமையான சூழலில் அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் போனதற்கு, ஈத் வாழ்த்துகள் சொல்ல முடியாமல் போனதற்கு நான் கவலைப்படுகிறேன். அவர்களால் கண்டிப்பாக பக்ரீத் கொண்டாடிருக்க முடியாது என்பது எனக்குத் தெரியும்.
ஒவ்வொருநாளும் தொடர்பில் இருப்போம் என்று உறுதி செய்த பின்பே அங்கிருந்து கிளம்பினேன். இது படத்தில் அவரும், அவர் சகோதரனும் ஒருவருக்கொருவர் உறுதி தந்துகொள்ளும், அற்புதமாக நடிக்கப்பட்ட நெகிழ்ச்சியான காட்சியைப் போல. ஆனால் என்னால் என் குழந்தையை இப்போது தொடர்புகொள்ள முடியவில்லை. #இதுஎன்இந்தியாஅல்ல" என்று ஷோனாலி பதிவிட்டுள்ளார்.
இதற்கு ஆதரவும், எதிர்ப்புமாக நெட்டிசன்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
அமலாபாலுக்கு எவ்வளவு தைரியம்!: வசுந்தரா பேட்டி - வீடியோ