

கல்லீரல் பாதிப்பு மற்றும் காசநோயிலிருந்து மீண்டது குறித்து இந்தி நடிகர் அமிதாப் பச்சன் பகிர்ந்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியின் ஸ்வஸ்த் இந்தியா அறிமுக நிகழ்ச்சியில், மருத்துவர் ஹர்ஷ் வர்தனுடன் அமிதாப் பச்சன் கலந்துரையாடினார். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது குறித்தும், அது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் நோயிலிருந்து விரைவில் மீண்டெழுவது குறித்தும் அமிதாப் பேசினார்.
இது தொடர்பாக அமிதாப் கூறுகையில், "நான் தனிப்பட்ட எடுத்துக்காட்டைச் சொல்லியே, நம் உடல் பரிசோதனை செய்துகொள்வது குறித்த விஷயங்களைப் பரப்பி வருகிறேன். நான் காசநோயிலிருந்து தப்பித்தவன், ஹெபடைடிஸ் பி பிரச்சினையிலிருந்து தப்பித்தவன் என்பதைச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.
தவறான ரத்தம் கொடுக்கப்பட்டு எனது கல்லீரல் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுவிட்டது. ஆனால் பாதிப்பான 20 வருடங்கள் கழித்தும் அது பற்றி என்னால் பரிசோதனையில் தெரிந்துகொள்ள முடிந்ததால் மீதி 25 சதவீதத்தோடு நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
எல்லாவற்றுக்கும் சிகிச்சை உண்டு. எனக்கு காசநோய் இருந்ததே 8 வருடங்கள் வரை தெரியாது. இந்த பாதிப்பு எனக்கு வந்திருக்கிறது என்பதால் யாருக்கும் வரலாம் என சற்று அகந்தையுடனும் கூறி வருகிறேன்.
எனவே, பரிசோதனைக்கு நீங்கள் உங்களை உட்படுத்தவில்லை என்றால் உங்களுக்கு எப்போதும் அது பற்றித் தெரிய வராது. அப்படியென்றால் அதற்கான சிகிச்சையும் உங்களுக்குக் கிடைக்காது" என்று அமிதாப் பச்சன் தெரிவித்தார்.