இந்தி 'சந்திரமுகி' இரண்டாம் பாகம் அறிவிப்பு: அக்‌ஷய்குமாருக்கு பதிலாக கார்த்திக் ஆர்யன்

இந்தி 'சந்திரமுகி' இரண்டாம் பாகம் அறிவிப்பு: அக்‌ஷய்குமாருக்கு பதிலாக கார்த்திக் ஆர்யன்
Updated on
1 min read

'பூல் புலைய்யா' (Bhool Bhulaiyya) படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நாயகனாக நடித்த அக்‌ஷய் குமார் இதில் நடிக்கப்போவதில்லை.

1993-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் 'மணிச்சித்ரதாழ்'. ஷோபனா, மோகன்லால், சுரேஷ் கோபி உள்ளிட்டவர்கள் நடிக்க, ஃபாசில் இதை இயக்கியிருந்தார். அந்த வருடம் வெளியான மலையாளப் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை 'மணிச்சித்ரதாழ்' படைத்தது. நடிகை ஷோபனாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.

கிட்டத்தட்ட 11 வருடங்கள் கழித்து 2004-ம் ஆண்டு 'ஆப்தமித்ரா' என்று கன்னடத்திலும், 2005-ல் 'சந்திரமுகி' என்று தமிழ் மற்றும் தெலுங்கிலும், 2007-ல் 'பூல் புலைய்யா' என்று இந்தியிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டு வெளியானது.

இதில் கன்னடம், தமிழ், மற்றும் தெலுங்குப் பதிப்புகளை பி.வாசு இயக்கியிருந்தார். இந்தியில் பிரியதர்ஷன் இயக்க, அக்‌ஷய் குமார், வித்யா பாலன், ஷைனி அஹூஜா, அமிஷா படேல் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். மறு ஆக்கம் செய்யப்பட்ட எல்லா பதிப்புகளும் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

கன்னடத்தில் 'ஆப்தமித்ரா'வின் இரண்டாம் பாகம் 'ஆப்த ரக்‌ஷகா' என்ற பெயரில் வெளியானது. இந்தப் படம் தெலுங்கில் 'நாகவல்லி' என்று ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இந்தியில் 'பூல் புலைய்யா' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இது புதிய கதையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், முதல் பாகத்தில் நடித்த யாரும் இதில் நடிக்கப்போவதில்லை. நாயகனாக கார்த்திக் ஆர்யன் நடிக்கவுள்ளார். பூஷன் குமார் தயாரிக்க அனீஸ் பஸ்மி இந்தப் படத்தை இயக்குகிறார். ஃபர்ஹாத் சம்ஹி, ஆகாஷ் கவுஷிக் இணைந்து படத்தின் திரைக்கதையை எழுதவுள்ளனர். படத்தின் முதல் பார்வை போஸ்டரை தயாரிப்பாளரும், நாயகனும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in