

அஜய் தேவ்கன் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் 'மைதான்' இந்திப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய கால்பந்து அணியின் பொற்காலம் என்று அழைக்கப்பட்டும் 1952லிருந்து 62 வரை, அணியின் பயிற்சியாளராக இருந்த, நவீன இந்திய கால்பந்தின் சிற்பி என்று அறியப்படும் சையத் அப்துல் ரஹிம் பற்றிய கதைதான் 'மைதான்'. 1950லிருந்து, 1963-ல் அவர் மறையும் வரை, இந்திய அணியின் மேலாளராகவும் ரஹிம் இருந்தார். இந்தக் கதாபாத்திரத்தில்தான் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.
'பதாய் ஹோ' படத்தை இயக்கிய அமித் ரவிந்தர்நாத் சர்மா இந்தப் படத்தை இயக்குகிறார். போனி கபூர், ஆகாஷ் சாவ்ல்பா, அருணவா ஜாய் சென்குப்தா இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
'மஹாநடி' படத்துக்காக தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் அஜய் தேவ்கனின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். பாலிவுட்டில் கீர்த்தியின் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் படப்பிடிப்பும் இன்றே தொடங்கிவிட்டது. ஜகர்தா, ரோம், மெல்போர்ன் என சர்வதேச அளவில் பல இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. 2020-ல் படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது.