

மும்பை
மகாராஷ்டிரா வெள்ளத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ .25 லட்சம் பங்களித்த பாலிவுட் நட்சத்திர தம்பதியர் ரித்தீஷ் மற்றும் ஜெனிலியா தேஷ்முக் ஆகியோருக்கு முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள மழைவெள்ளம் மாநிலத்தின் சாங்லி, கோலாப்பூர் மற்றும் சதாரா மாவட்டங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதால் 3.78 லட்சம் பேர் அரசாங்கம் அமைத்துள்ள 432 தற்காலிக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மகாராஷ்டிரா முதல்வரிடம் பாலிவுட் நட்சத்திர தம்பதியினர் ரூ.25 லட்சம் நன்கொடை அளித்துள்ளனர். காசோலையை ஒப்படைக்கும் புகைப்படத்தை தனது முதல்வர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இன்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது: ''மகாராஷ்டிரா வெள்ளத்திற்கான முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25,00,000/ - (ரூ. 25 லட்சம்) பங்களித்தமைக்கு நன்றி ரித்தீஷ் மற்றும் ஜெனிலியா தேஷ்முக்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காணாத வகையில் மகாராஷ்டிராவில் கடுமையான மழைபொழிவு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மிகப்பெரிய கொய்னா அணை, 100 டிஎம்சி கொள்ளளவும் 890 சதுர கி.மீ.பரப்பளவும் கொண்டது. அதன் அணை நீர்த்தேக்கம் கடந்த ஒன்பது நாட்களில் பாதி அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் 50 டி.எம்.சி. நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.