தொலைபேசி எண்ணால் தொல்லை: டெல்லி நபரிடம் மன்னிப்பு கோரிய சன்னி லியோன்
தான் நடித்துள்ள படத்தில் நிஜத்தில் ஒருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மொபைல் எண்ணைத் தவறுதலாகப் பகிர்ந்ததற்கு நடிகை சன்னி லியோன் மன்னிப்பு கோரினார்.
'அர்ஜுன் பாடியால' என்ற படத்தில் சன்னி லியோன் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இதில் தனது மொபைல் எண்ணைக் கூறுவது போன்ற காட்சியில் சன்னி ஒரு எண்ணைப் பகிர, அதைக் கவனித்த ரசிகர்கள் பலரும் நிஜத்தில் அந்த எண்ணுக்கு அழைத்து சன்னி லியோனிடம் பேச முயன்றனர்.
அந்த எண், உண்மையில், டெல்லியைச் சேர்ந்த புனீத் அகர்வால் எனபவரின் எண். தொடர் தொலைபேசி அழைப்புத் தொல்லையால், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் புனீத்.
"ஜூலை 26 அன்று, படம் வெளியானதும், எனக்குத் தெரியாத பலரிடமிருந்து, சன்னி லியோனிடம் பேச வேண்டும் என பல தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. முதலில் யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் பிறகுதான் 'அர்ஜுன் பாடியாலா' படத்தில் எனது எண்ணைப் பயன்படுத்தியுள்ளார்கள், சன்னி லியோன் அதை வசனமாகச் சொல்கிறார் என்பது தெரிந்தது
பலர் என்னைத் தொலைபேசியில் அழைத்து அசிங்கமாகப் பேசுகின்றனர். நான் காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் கொடுத்தும் இன்னும் எதையும் செய்யவில்லை" என்று புனீத் கூறியுள்ளார்.
தினமும் 100 - 150 அழைப்புகள் வருவதாகவும், சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சன்னி லியோன் புனீத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார். "மன்னித்துவிடுங்கள். உங்களுக்கு இப்படி நடக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. யாரையும் துன்புறுத்துவதும் என் நோக்கமில்லை. இப்படி அழைப்பவர்கள் தொலைபேசியில் அழைப்பவர்கள் சுவாரசியமானவர்களாகத் தெரிகிறார்கள்" என்று சன்னி லியோன் பேசியுள்ளார்
