

'விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர் கான் மற்றும் சைஃப் அலி கான் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மாதவன், விஜய் சேதுபதி, கதிர், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை சஷிகாந்த் தயாரித்திருந்தார்.
2017-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி வெளியான இந்தப் படம் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூல் சாதனை புரிந்தது. இந்த சாதனையைத் தொடர்ந்து, இந்தி ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது.
ஷாரூக் கான் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியான போது, படக்குழுவினர் அதனை மறுத்தனர். மேலும், இந்தியில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமே இணைந்து தயாரிக்கும் என்று அறிவித்தார் சஷிகாந்த்.
தற்போது இந்தி ரீமேக்கையும் புஷ்கர் - காயத்ரி இணையே இயக்கவுள்ளதாகவும், அதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர் கானும், மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கானும் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது.
2020 மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்தப் படத்தை நீரஜ் பாண்டே - சஷிகாந்த் - ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.