

பாலிவுட் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் தனது வீட்டில் கடந்த சனிக்கிழமை நடத்திய விருந்தில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள் போதை வஸ்துக்களைப் பயன்படுத்தியதாக அகாலி தள எம்.எல்.ஏ, ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், கரண் ஜோஹரால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த விருந்தில் தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்பீர் கபூர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். பார்ட்டியில் எடுக்கப்பட்ட வீடியோவில் பாலிவுட் பிரபலங்கள் ஒவ்வொருவரும் தங்கள் முகத்தை ஒருசில வினாடிகள் காட்டுகின்றனர்.
கரண்ஜோஹர் பகிர்ந்த வீடியோவை தனது வலைபக்கத்தில்பகிர்ந்துள்ள அகாலி தள எம்.எல்.ஏ., மஞ்சீந்தர் சிங் சிர்ஸா, "உட்தா பாலிவுட் - நிழலுக்கும் நிஜத்துக்குமான இடைவெளி இதுதான். பாலிவுட் பிரபலங்கள் எப்படித் தங்கள் போதை முகத்தை பெருமையுடன் காட்டுகின்றனர் எனப் பாருங்கள்.
நட்சத்திரங்களின் போதைப் பழக்கத்தை அம்பலப்படுத்துகிறது இந்த வீடியோ. இவர்கள்தான் உட்தா பஞ்சாப் என்ற படத்தை எடுத்தார்கள். இதை பார்த்து வெறுப்பாக இருந்தால் @shahidkapoor @deepikapadukone @arjunk2@Varun_dvn @karanjohar @vickykaushal09 என்ற ஐடிக்களில் ரீட்வீட் செய்யுங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
அகாலி தள எம்.எல்.ஏ.,வின் டீவ்ட்டுக்கு சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரபலமும் பதிலளிக்கவில்லை, ஆனால் அரசியல் பிரமுகர் மிலிந்த் தியோரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார்.
அதில், "எனது மனைவியும் அந்த பார்ட்டியில் பங்கேற்றிருந்தார். யாரும் போதையில் இல்லை. இது போன்ற பொய்களைப் பரப்பி பிரபலங்களை மாசுபடுத்த வேண்டும். இதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேளுங்கள்" என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது வைராலகி வருகிறது.