

மிஷன் மங்கள் திரைப்படத்தின் போஸ்டரில் நடிகர் அக்ஷய் குமாருக்கு அதிக முக்கியத்துவமும் கொடுத்துள்ளது பற்றி நடிகை தாப்ஸி பதிலளித்துள்ளார்.
இந்தியாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் விண்கலம் பற்றிய உண்மைக் கதை மிஷன் மங்கள் என்ற திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் விஞ்ஞானி ராகேஷ் தவான் கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். மேலும், வித்யா பாலன், நித்யா மேனன், சோனாக்ஷி சின்ஹா, தாப்சி பன்னு, கீர்த்தி குல்கர்னி உள்ளிட்ட நடிகைகள் பட்டாளும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தத் திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றில் அக்ஷய் குமாரின் முகம் பெரியதாகவும், மற்ற நடிகர்களின் முகம் சிறியதாகவும் அச்சிடப்பட்டுள்ளது. பெண் நடிகர்களை பின்னுக்குத் தள்ளுகின்றனர் என இது குறித்து சிலர் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
இந்த போஸ்டர் சர்ச்சை பற்றி நடிகை தாப்சியிடம் கேட்டபோது, "மக்கள் இதை கவனித்திருப்பது நல்லது. ஆனால் அதே மக்கள் பெண்களை மையப்படுத்திய படத்தின் வசூல் குறித்தும் ஏதாவது செய்ய வேண்டும். ஏனென்றால் அக்ஷய்குமார்தான் ரசிகர்களை அரங்குக்கு வரவழைப்பார். அதுதான் கசப்பான உண்மை. நாங்கள் அனைவரும் எங்களால் முடிந்த சிறந்த உழைப்பைத் தந்திருக்கிறோம். ஆனால் அவரால் தான் அதிக வசூல் கிடைக்கும். இந்த நிஜத்தை நாம் மறுக்க முடியாது.
உருவாக்கியவர்களை கேள்வி கேட்காமல் போஸ்டரில் இருக்கும் பிரச்சினையை மக்கள் உணர்ந்து அது பற்றி ஏதாவது செய்ய முனைந்தால் நல்லது. பெண்கள் மையக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படங்களைப் பார்க்க அரங்குக்கு வருவதன் மூலம் ரசிகர்கள் இந்த நிலையை மாற்றலாம். ஆண் நடிகரா, பெண் நடிகரா என்று பாராமல் யாருடைய படம் அதிக வசூல் பெறுகிறது என்பதே எதிர்காலத்தில் கருத்தில் கொள்ளப்படும் என்று நம்புகிறேன். எப்படியும் இது ஒரு வியாபாரமே. உங்கள் படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதே முக்கியம்" என்று பதிலளித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 15 அன்று மிஷன் மங்கள் வெளியாகிறது.