

’ஜட்ஜ்மெண்டல் ஹாய் க்யா’ படத்தின் போஸ்டர் தான் வடிவமைத்த புகைப்படத்தை வைத்து காப்பியடிக்கப்பட்டது என ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த கலைஞர் ஃப்ளோரா போர்ஸி என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கங்கணா ரணவத், ராஜ்குமார் ராவ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ’ஜட்ஜ்மெண்டல் ஹாய் க்யா’. படம் வெளியாவதற்கு முன்பே படத்தலைப்பைப் பற்றி ஒரு சர்ச்சையும், ஹ்ரித்திக் படத்துடன் மோதுவது பற்றிய சர்ச்சையும் வந்து ஓய்ந்த பிறகே படம் வெளியானது.
தற்போது இந்தப் படத்தின் போஸ்டர் வடிவம் காப்பியடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஃப்ளோரா போர்ஸி என்கிற ஹங்கேரிய நாட்டுக் கலைஞர் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
கங்கணாவின் ஒரு க்ளோசப் புகைப்படத்தில் அவரது வலது கண்ணை பூனை மறைப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ள ஜட்ஜ்மெண்டல் ஹாய் க்யா போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே போல தான் எடுத்த புகைப்படத்தையும் போர்ஸி பகிர்ந்துள்ளார்.
"ஜட்ஜ்மெண்டல் ஹாய் க்யா என்ற பிரபல பாலிவுட் படத்தின் போஸ்டர் இது. என்னிடம் அனுமதி பெறவில்லை. என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை. தனிக் கலைஞர்களின் படைப்புகளை இப்படித் திருடுவது பெரிய நிறுவனங்களுக்கு அவமானமாக இருக்க வேண்டும்" என்று போர்ஸி தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்டருக்கான யோசனை எனது புகைப்படத்திலிருந்து திருடப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது என யாராவது விளக்க முடியுமா? இது நியாயமானதல்ல என்றும் போர்ஸி பதிவிட்டுள்ளார். மேலும், படத்தின் மத்த போஸ்டர்களும், இன்னும் சில நிறுவனம் சாரா தனிக் கலைஞர்களின் படைப்புகளிலிருந்து திருடப்பட்டுள்ளது என்பதையும் ஆதாரத்துடன் போர்ஸி பகிர்ந்துள்ளார்.