

அஜித் நடித்த ’வீரம்’ படத்தை ’பச்சன் பாண்டே’ என்ற பெயரில் அக்ஷய் குமார் ரீமேக் செய்யவுள்ளது பற்றி சில நாட்களுக்கு முன் செய்தி வந்தது. தற்போது விஜய் நடித்த ’கத்தி’ படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வ செய்திகள் வந்துள்ளன.
2014-ஆம் ஆண்டு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் இரட்டை வேடத்தில் நடித்த படம் ’கத்தி’. வெளியாகி வெற்றியும் பெற்றது. சில வருடங்கள் கழித்து ’கைதி நம்பர் 150’ என்ற பெயரில் சிரஞ்சீவி நடிக்க தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இதன் இந்தி ரீமேக் குறித்த விவரங்கள் வந்துள்ளன.
’கத்தி’யின் பாலிவுட் பதிப்பை, ’மிஷன் மங்கள்’ இயக்குநர் ஜகன் ஷக்தி இயக்குகிறார். ’இக்கா’ என்று இந்தப் படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
’மிஷன் மங்கள்’ படத்திலும் அக்ஷய்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ’மிஷன் மங்கள்’ படத்தின் காரணமாகவே ’கத்தி’ ரீமேக் சற்று ஒத்திவைக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் 15 அன்று ’மிஷன் மங்கள்’ வெளியாகிறது.