

தனுஷுடன் நடிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு, ஹ்ரித்திக் ரோஷன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
'அசுரன்' மற்றும் 'பட்டாஸ்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இவ்விரண்டு படங்களையும் முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டுத் தான் கார்த்திக் சுப்பராஜ் படத்துக்காக வெளிநாட்டுக்குச் செல்லவுள்ளார். அந்தப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
மேலும் இயக்குநர் மாரி செல்வராஜ், இயக்குநர் ராம்குமார் மற்றும் இயக்குநர் செல்வராகவன் ஆகியோரது படங்களிலும் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதனிடையே தன் முதல் இந்திப் படமான 'ராஞ்சனா' இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.
இந்தப் படத்தில் ஹ்ரித்திக் ரோஷன், சாரா அலிகான் ஆகியோரும் தனுஷுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பாலிவுட் இணையதளங்கள் செய்திகளை வெளியிட்டன. தற்போது தன் நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ள 'சூப்பர் 30' படத்துக்காக பேட்டியளித்துள்ளார் ஹ்ரித்திக் ரோஷன்.
அதில் தனுஷ் படம் தொடர்பான கேள்விக்கு, "அது உண்மையல்ல. ஆனந்த் எல் ராய் இன்னும் என்னை அணுகவில்லை. ஒருவேளை அவர் அணுகவுள்ளதாக இருந்தால் இருக்கலாம். எனக்குத் தெரியாது. அவர் அற்புதமான இயக்குநர். எனக்காக அவர் எதாவது வைத்திருந்தால் கண்டிப்பாக நான் அதை பரிசீலிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.