

தான் தங்கியிருந்த ஹோட்டலில் வாழைப்பழம் கேட்டு, ரசீதில் அதன் அதிக விலையைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார் நடிகர் ராகுல் போஸ்.
ராகுல் போஸ், நடிகர், இயக்குநர், சமூக ஆர்வலர் என்று பன்முக அடையாளம் உள்ளவர். தமிழில் விஸ்வரூபம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்று சொன்னால் வாசகர்களுக்கு ஞாபகம் வரலாம்.
சமீபத்தில் படப்பிடிப்புக்காக சந்தீகர் சென்றுள்ள ராகுல் போஸ், அங்கு ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார். அங்கு உடற்பயிற்சி முடிந்து வாழைப்பழம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் வாழைப்பழத்துடன் வந்த ரசீது இவரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோவாகவே பதிவு செய்து வெளியிட்டுள்ளார் ராகுல் போஸ்.
அதில், "நான் சந்தீரில் ஒரு ஜேடபிள்யூ மாரியட் என்கிற ஹோட்டலில் தங்கியிருக்கிறேன். ஜிம்மில் பயிற்சி செய்து கொண்டிருந்த போது இரண்டு வாழைப்பழங்கள் கேட்டேன். எனக்குக் கொடுத்தார்கள். அதற்கான ரசீதைப் பாருங்கள்" என்று ரசீதைக் காட்டுகிறார். அதில் இரண்டு பழங்களுக்கான விலை, ஜிஎஸ்டியோடு சேர்த்து ரூ. 442.50 என்று போடப்பட்டுள்ளது. "இவற்றுக்கு நான் தகுதியானவனா தெரியவில்லை" என்று நக்கலாகப் பேசி முடித்துள்ளார் ராகுல் போஸ்.
மேலும், ட்விட்டரில், "நீங்கள் இதைப் பார்த்தால் தான் நம்ப முடியும். பழங்களால் நமது உயிருக்கு ஆபத்து கிடையாது என்று யார் சொன்னது? ஜேடபிள்யூ மாரியட் ஹோட்டலில் இருப்பவர்களிடம் கேளுங்கள்" என்ற கருத்துடன் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார் அவரது இந்த வீடியோவுக்கு இணையத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே வந்துள்ளது. மாரியட் ஹோட்டல் தரப்பில் இது குறித்து எதுவும் பதில் சொல்லவில்லை.