

'டியர் காம்ரேட்' படத்தை தனது தயாரிப்பு நிறுவனம் இந்தியில் ரீமேக் செய்யும் என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் அறிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'டியர் காம்ரேட்'. தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டாலும், விஜய், ராஷ்மிகாவுக்கு தமிழகம் மற்றும் கேரளத்தில் இருக்கும் ரசிகர் கூட்டத்தின் காரணமாக, தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.
தீவிரமான காதல் கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படம் ஜூலை 26 அன்று வெளியாகிறது. படத்தின் பிரத்யேகக் காட்சி பிரபலங்கள் சிலருக்கு முன்னரே திரையிடப்பட்டதாகத் தெரிகிறது. அப்படி ஒரு காட்சியில் படத்தைப் பார்த்த பிரபல பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர், சமூக வலைதளத்தில் படத்தைப் பாராட்டிப் பதிவு செய்துள்ளார்.
" 'டியர் காம்ரேட்' படத்தை முதலில் பார்க்கும் இன்பம் கிடைத்தது. என்ன ஒரு பிரமிக்க வைக்கும் வலிமையான காதல் கதை. ஜஸ்டினின் தனிச்சிறப்புமிக்க இசை. பரத் கம்மாவின் கூர்மையான இயக்கம். விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவின் உச்ச நடிப்பு. படம் என்னை பாதித்துள்ளது. ஒரு முக்கியமான நல்ல விஷயத்தையும் விட்டுச் செல்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு வாழ்த்துகள். தர்மா மூவீஸ் இந்த அழகான படத்தை ரீமேக் செய்கிறது என்பதை அறிவிக்கிறேன்" என்று கரண் ஜோஹர் பகிர்ந்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்த மனிதர் எங்கள் 'டியர் காம்ரேட்' படத்தை இந்தியில் ரீமேக் செய்வதில் பெருமை. உங்களுக்கு எங்கள் அன்பும், மரியாதையும். உங்களுடனும், தர்மா மூவிஸுடனும் இணைந்து பணியாற்றக் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதுவரை ரூ.270 கோடி வரை சம்பாதித்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் 'கபீர் சிங்' படமும், விஜய் தேவரகொண்டா நடித்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.