பிரியங்கா சோப்ரா புகைப்படம்: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

மயாமியில் குடும்பத்துடன் பிரியங்கா சோப்ரா..
மயாமியில் குடும்பத்துடன் பிரியங்கா சோப்ரா..
Updated on
1 min read

ஆஸ்துமா நோயாளிகளைப் பாதிக்கும் என்பதால் புகைப் பிடிப்பதை எதிர்த்த நடிகை பிரியங்கா சோப்ரா, புகைப் பிடிப்பது போல வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து கடந்த சில நாட்களாக நெட்டிசன்கள் அவரைக் கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் வருகின்றனர்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்கத் தொலைக்காட்சியில் குவாண்டிகோ என்ற தொடரில் நடித்ததன் மூலம் சர்வதேச பிரபலமானார். இதன் மூலம் ஹாலிவுட் திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு வர ஆரம்பித்தன. நடிகரும் பாடகருமான நிக் ஜோனாஸை கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். அன்றிலிருந்தே இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் பாப்பராத்ஸி எனப்படும் புகைப்படக் கலைஞர்கள் இவர்களை க்ளிக் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

சமீபத்தில் பிரியங்கா, நிக் உள்ளிட்ட பிரியங்காவின் குடும்பத்தினர் மயாமியில் பிரியங்காவின் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடினர். இதில் மத்தாப்பு போன்ற மெழுகுவர்த்திகளை பிரியங்கா ஊதுவது போன்ற புகைப்படம் ஏற்கெனவே வந்து, ''இது மத்தாப்பு மெழுகுவர்த்தி என்று கூட தெரியாமல் ஊதி அணைக்கப் பார்க்கிறாரே'' என்று, பலரின் கிண்டலுக்கு ஆளானார்.  

கடற்கரையோரம் தனது கணவருடன் பிரியங்கா அமர்ந்து புகைப் பிடிப்பது போன்ற புகைப்படம் சில நாட்களுக்கு முன் வெளியானது. இதில் பிரியங்காவும்,  நிக் ஜோனாஸ்ஸும் சுருட்டு பிடித்துக் கொண்டிருந்தனர். தற்போது இந்தப் படத்தையும் நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

கடந்த வருடம், பிரியங்கா தனக்கு ஆஸ்துமா பிரச்சினை இருப்பதாகவும், தனக்கு புகைப் பிடிப்பவர்களைக் கண்டால் பிடிக்காது என்றும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், புகையால் தன்னைப் போன்ற ஆஸ்துமா நோயாளிகளுக்குப் பிரச்சினை வரும் என்பதால், தீபாவளியை பட்டாசு வெடிக்காமல் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 


கடந்த வருடம் பிரியங்கா பகிர்ந்த ட்வீட்டுகள்

இவற்றை மேற்கோள் காட்டியே நெட்டிசன்கள் பிரியங்காவை வறுத்தெடுத்தனர். நீங்கள் புகைப் பிடிப்பது உங்கள் விருப்பம். ஆனால் இப்போது மட்டும் உங்கள் ஆஸ்துமா பிரச்சினை தீர்ந்துவிடுமா?  என்றெல்லாம் கேள்வி கேட்டு பிரியங்காவை விமர்சித்துள்ளனர்.

முன்னதாக, பிரியங்காவின் திருமணம் அன்றும் இதே போல ஒரு விமர்சனம் எழுந்தது. திருமண வைபவத்தை முன்னிட்டு நிறைய பட்டாசுகளும் வான வேடிக்கைகளும் வெடிக்கப்பட்டன. தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு உங்கள் திருமணத்தின் போது வெடித்தீர்களே, அப்போது மட்டும் பிரச்சினை வராதா? என்று அப்போதும் நெட்டிசன்கள் பிரியங்காவை விமர்சிக்கத் தவறவில்லை. 

இந்த விமர்சனங்களுக்கு பிரியங்கா தரப்பிலிருந்து இன்னும் பதில் வரவில்லை. 
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in