Published : 15 Jul 2019 10:39 AM
Last Updated : 15 Jul 2019 10:39 AM

'லயன் கிங்' படத்தில் ஷாரூக் குரல்: கடுமையாக விமர்சிக்கும் பாக். நடிகர்

ஷான் ஷாகித் - ஷாரூக் கான்

'தி லயன் கிங்' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை இந்தியாவில் வெளியாகிறது. ஆங்கிலத்தோடு இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

படத்தின் இரண்டு முதன்மைக் கதாபாத்திரங்களுக்கும், இந்திப் பதிப்பில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானும் அவரது மகன் ஆர்யனும் குரல் கொடுத்துள்ளனர். இது குறித்து பாகிஸ்தான் நடிகர் ஷான் ஷாகித் என்பவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

"ஒரு அழகிய படத்தை இந்தி டப்பிங்கில் சிதைக்காதீர்கள். விளம்பரத்தில் கேட்ட ஷாரூக் கானின் குரலில் எந்த வித்தியாசமும் இல்லை. எல்லா படத்திலும் இருப்பது போலவே உள்ளது. 'லயன் கிங்' படத்துக்காக அவர் குரல், பாவனையை மாற்றியிருக்க வேண்டும்" என்று ஷான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனால், ஷான் குறிப்பிட்ட விளம்பரத்தில் இருந்தது ஷாரூக் கானின் மகன் ஆர்யனின் குரல் என்று பலரும் குறிப்பிட்டு, ஷானைக் கிண்டல் செய்து, தாக்கி கருத்துப் பதிவிட ஆரம்பித்துவிட்டனர். உங்களுக்கு வேண்டுமென்றால் ஆங்கிலத்தில் பாருங்கள், யாரும் உங்களை இந்தியில் பார்க்க வற்புறுத்தவில்லை என்று ரசிகர்கள் கூறினர்.

இதற்கு பதில் அளித்த ஷான், "(அது ஆர்யன் குரல் என்றால்) இன்னும் மோசம். ஏனென்றால் அவருக்கென தனித்துவமான அடையாளம் இல்லை. அப்பாவின் குரல் போலவே இருக்கிறது. அப்பா மகனின் வீட்டுப் பாடத்தைச் செய்தது போல இருக்கிறது" என்று கூறினார். 

மேலும், இன்னொரு பதிவில், "மேற்கில் இருப்பவர்கள் பணம் சம்பாதிப்பதற்கான நல்ல நகர்வு இது. இளம் திறமைகளை நான் ஊக்குவிக்கிறேன். ஆனால் தவறானவர்களை சரியாகக் காட்ட ஊக்குவிப்பது மோசமான செயல். வாரிசாக இருப்பதால் மட்டுமே வாய்ப்பு பெறுவது பலனளிக்காது. வில் ஸ்மித்தால் கூட (தன் மகனுக்காக) அதைச் செய்ய முடியவில்லை. உங்களை நான் அவமதிக்கவில்லை என்று நம்புகிறேன்" என்று விமர்சித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x