வீரப்பன் கொலையே புதிய திரைக்களம்: ராம் கோபால் வர்மா அறிவிப்பின் பின்னணி என்ன?

வீரப்பன் கொலையே புதிய திரைக்களம்: ராம் கோபால் வர்மா அறிவிப்பின் பின்னணி என்ன?
Updated on
2 min read

பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா, சந்தன மர வீரப்பன் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக திரைப்படம் எடுக்க முடிவு செய்துள்ளார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்துக்கு "கில்லிங் வீரப்பன்" (Killing Veerappan) எனப் பெயர் வைத்துள்ளார்.

மும்பை தாதா உலகம், மும்பை தாக்குதல் சம்பவம் என ஏற்கெனவே பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து படம் எடுத்துள்ள ராம் கோபால் வர்மா, அடுத்து சந்தனக் கடத்தல் விவகாரத்தில் வீரப்பன் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது தொடர்பான திரைப்படத்தை இயக்கவுள்ளார். இதில் கன்னட நடிகர் ஷிவ்ராஜ் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். வீரப்பன் பாத்திரத்தில் நடிக்கும் நடிகருக்கான தேர்வு நடைபெற்றுவருகிறது.

இது பற்றி பேசியுள்ள ராம் கோபால் வர்மா, "வீரப்பனின் கதை எப்போதுமே என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதைப் பற்றிய படத்தை இயக்க ஏற்கெனவே திட்டமிட்டிருந்தேன். இப்போதுதான் அதற்கான சரியான திரைக்கதை கிடைத்துள்ளது.

இந்தப் படம் வீரப்பனின் தனிப்பட்ட கதையை காட்டாது. மாறாக வீரப்பனை கொலை செய்தவரைப் பற்றிய படமாக இருக்கும். ஷிவ்ராஜ்குமாரை இதில் நடிக்க வைக்க ஒரு காரணம் உள்ளது. வீரப்பன் ஷிவ்ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமாரை கடத்திச் சென்றார். தற்போது ஷிவ்ராஜ்குமாருக்கு வீரப்பனை பழிவாங்க திரையில் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழக, கேரள, கர்நாடக மாநில அரசாங்கங்கள் பல கோடி ரூபாயை செலவழித்து வீரப்பனை பிடிக்க திட்டமிட்டனர். 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் தேடுதல் வேட்டையில் இருந்தனர். கடைசியில் ஒருவரால் மட்டுமே வீரப்பனை கொல்ல முடிந்தது. அந்த ஒருவரைப் பற்றிய படமாகவே இது இருக்கும்" என்று கூறியுள்ளார்.

வீரப்பனை ஒசாமா பின் லேடனை விட அபாயகரமான ஆள் என ராம் கோபால் வர்மா வர்ணித்துள்ளார். "வீரப்பனை விட அபாயகரமான ஆளை என்னால் பார்க்கமுடியவில்லை. ஒசாமா பின் லேடனை விட சூழ்ச்சியான, இரக்கமில்லாத ஆளாகவே வீரப்பன் எனக்குத் தெரிகிறார். ஒசாமாவுக்கு சர்வதேச அளவில் தொடர்புகள் இருந்திருக்கலாம் ஆனால் அவர் வீரப்பனை விட அபாயகரமானவர் அல்ல."

படத்தின் திரைக்கதையை எழுதிவரும் ராம் கோபால் வர்மா, ஷிவ்ராஜ் குமார் மற்ற பட வேலைகளை முடிப்பதற்காக காத்திருக்கிறார். இந்த மாத இறுதியில் படத்தை துவக்குகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீரப்பனைப் பற்றிய அனைத்து விதமான ஆவணங்களையும் ஆராய்ச்சி செய்துள்ள ராம் கோபால் வர்மா, புதிய கோணத்தில் இந்தப் படத்தை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

படத்தின் நாயகி குறித்து கேட்டபோது, அது ரகசியமான விஷயம் என்றும், ரசிகர்களை தான் ஆச்சரியப்படுத்தப் போவதாகவும் ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.

திருப்பதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக, ஆந்திர போலீஸாரால் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், வீரப்பன் கதையை ராம் கோபால் வர்மா கையிலேடுத்து, அவசர அவசரமாக அறிவிப்பை வெளியிட்டியிருப்பது கவனிக்கத்தது.

வீரப்பனின் கதையை படமாக்க விரும்புவதாக இதுவரைச் சொல்லி வந்த ஆந்திரத்தை பூர்விகமாகக் கொண்டுள்ள அவர், இப்போது அந்தப் படத்துக்கு 'கில்லிங் வீரப்பன்' என்று பெயரிட்டிருப்பது, வீரப்பன் என்கவுன்ட்டர் விவகாரத்தை அழுத்தமாகச் சொல்ல முற்படுவதாக தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in