

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'அகிரா' படத்தின் மூலமாக இந்தி திரையுலகில் அறிமுகமாகிறார் லட்சுமி ராய்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா, முன்னணி இயக்குநர் அனுராக் காஷ்யப், சத்ருகன் சின்ஹா உள்ளிட்ட பலர் நடிக்க தொடங்கப்பட்ட படம் 'அகிரா'. மார்ச் 16ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
'அகிரா' என்பது ஜப்பானிய வார்த்தை. இந்த வார்த்தைக்கு பிரகாசமானவள், புத்திசாலியானவள் என்று பொருள்.
தமிழில் அருள்நிதி நடிப்பில் வெளியான 'மௌனகுரு' படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இயக்கவுள்ளார் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. தமிழைப் போல அல்லாமல், நாயகியை மையமாக வைத்து திரைக்கதையை முருகதாஸ் மாற்றியுள்ளார்.
இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, நடித்து வருகிறார் லட்சுமிராய். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்தி திரையுலகில் அறிமுகமாவதால், தொடர்ந்து பாலிவுட்டிலும் காலூன்ற ஆர்வத்துடன் இருக்கிறார் லட்சுமி ராய்.